இந்தியாவிலும் இனி காசுக்கு காற்று!!!

vitality air boxஉலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. அங்கு தொழில் துறையும் அதிக அளவு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாது குளிர்காலத்தில் வீடுகளில் குளிர்காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் காற்றில் மாசு பெருகி வருகிறது.

இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் சீனாவில் பனிப் புகை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்கள் காற்றை விற்பனைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டில் உள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வரும் கனடா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து காசு கொடுத்து வாங்குகிறது சீனா.

ஒரு பாட்டில் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று 10 மணி நேரம் வரை இருக்கும்.

இதே நிலை இந்திய நகரங்களுக்கு வர வெகு தூரம் இல்லை. இப்போதே டில்லி மிக அதிக அளவு மாசடைந்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த, வரும் மார்ச் மாதம் வரை டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலும் கார்கள் வாங்குவது அதிகரித்து வருவதால் சென்னையும் டில்லி நகரம் போன்றே மாசடைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. சீனா போன்றே டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று விற்கும் பாட்டில்கள் இனி கடைகளில் விற்கப்படலாம்.

ஒரு காலத்தில் “தண்ணிய போய் காசு கொடுத்து வாங்கறதான்னு” கேட்டவர்களே பாட்டில்களில் விற்கும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. அதே போன்ற நிலை இனி காற்றுக்கும் வர வெகுநாட்கள் இல்லை.

Close