திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 6¾ கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது!!!

gold-jewelry-buying-03சோதனை

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தனர்.அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நேற்று அதிகாலை மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 2 பேர் உடலில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விமானத்தில் சோதனையிட்ட போது கழிப்பறையில் தங்க நகைகளை சிறிய பெட்டிகளில் அடைத்து வீசப்பட்டு கிடந்தன. இதனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனையில் மொத்தம் 5 கிலோ 281 கிராம் தங்கம் சிக்கியது. இதனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை கொண்டு சென்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது பெயர், விவரம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கழிப்பறையில் தங்க நகைகளை வீசிச்சென்றது யார்? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் சிவகங்கையை சேர்ந்த செவந்தியான், சாந்தா, நாகை செல்வி ஆகியோர் தங்க நகைகளை கழுத்தில் அணிந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து செவந்தியானிடம் இருந்து 100 கிராம், சாந்தாவிடம் இருந்து 480 கிராம், செல்வியிடம் இருந்து 160 கிராம் என மொத்தம் 740 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புரோக்கர் சிக்கினார்
இதேபோல மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் இறங்கிய பயணி சதீஷ் 80 கிராம் தங்க நகைகளை அணிந்திருந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது நகைகளை கடத்தி வரவில்லை எனவும், அணிகலனாக அணிந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அவரை விடுவித்து விட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் விமான நிலையத்தின் வெளியே சதீஷ் அந்த தங்க நகைகளை கழற்றி சென்னையை சேர்ந்த புரோக்கர் ஜாபர் சாதிக்கிடம் கொடுத்து பணம் பெற்றார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர். மேலும் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்திய போது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் நகைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 680 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷின் 80 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடம் இருந்து மொத்தம் 760 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் 6 கிலோ 781 கிராம் கடத்தல் தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Close