கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை தாக்கிய வாலிபர் போலீசார் எச்சரித்து அனுப்பினர்!!!

thumb

கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை தாக்கிய வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் ரகளை
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை கத்தாரில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்தபோது ஒரு வாலிபர் திடீரென ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், அரபு நாடுகளில் குற்றங்கள் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படுவதால் குற்றங்கள் குறைகின்றன, இந்தியாவில் தண்டனை குறைவாக இருப்பதால் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது எனக்கூறி சத்தம் போட்டார்.

உடனே அருகில் இருந்த சக பயணிகள் அவரை சமாதானம் செய்ய முயன்றபோது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

விமானம் சென்னையில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்று விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அறிவுரை
விசாரணையில் அவர் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 24) என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றதும் தெரியவந்தது. அங்கு அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், கடந்த சில மாதங்களாக மாதவனை சென்னைக்கு விமானத்தில் அனுப்ப அவர் பணியாற்றிய நிறுவனம் முயன்று தற்போது தான் அனுப்பி வைத்துள்ளது.

இந்தநிலையில் மாதவனை அழைத்துச்செல்ல அவரது அண்ணன் ராஜசேகரன் என்பவர் வந்திருந்தார். பின்னர் மாதவனின் நிலைமைபற்றி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாதவனை எச்சரித்து அவரது அண்ணனுடன் அனுப்பிவைத்தனர்.

Close