கற்றலில் பிழையா? கற்பித்தலில் குறைபாடா?

download (4)கல்வி ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. கற்றுத் தேர்ந்தவர் என்றால், அனைத்து விஷயங்களையும் அவர் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

ஒரு துறையில் நிபுணர் என்று கூறினால், அந்த குறிப்பிட்ட துறையை முழுவதும் கற்றுத் தேர்ந்தவராக இருப்பார். பிற துறைகளில் அவருக்குப் போதிய ஞானம் இருக்காது. அதனால், அனைவராலும் அனைத்தையும் கற்றுத் தேற முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், நமது கல்வி முறையில், ஆரம்பக் கல்வி முதலே அடிப்படைக் கல்வி என சில பாடங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை வரையறுத்து, அதற்கேற்ப பாடத் திட்டத்தை வகுத்து, குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெற்றதால்தான், அவர் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என அறிவிக்கின்றனர்.

அடிப்படைக் கல்வி என வரையறுத்துள்ளது கே.ஜி. வகுப்புகள் தொடங்கி 10-ஆம் வகுப்பு வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த வகுப்புகளை அவரவர் வசதிக்கேற்ப, கற்கும் திறனுக்கேற்ப, வசிக்கும் பகுதிக்கேற்ப அரசு ஆரம்பப் பள்ளி, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, ஐ.சி.எஸ்.இ. பள்ளி என வெவ்வேறு தளங்களில் அவரவர் தாய்மொழியில், ஆங்கில மொழியில் கற்கின்றனர்.உதாரணமாக, மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்தும், சுதேசி இயக்கம் குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் வரலாற்றுப் பாடத்தில் தெளிவாகக் கற்றுத் தரப்படுகிறது.

தாய்மொழியில் படிப்பவர்க்கு அவரது மொழியிலோ, ஆங்கிலத்தில் கற்பவருக்கு ஆங்கில மொழியிலோ கற்பிக்கப்படுகிறது. மாநிலங்கள் குறித்தும், நதிகள் குறித்தும் சிறு வயதிலேயே சில கருத்துகள் ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றன. உயர் கல்விக்கு ஒருவர் மருத்துவப் படிப்பையோ அல்லது பொறியியல் படிப்பையோ தெரிந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவரிடம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் எது என்று கேட்டால், “லட்சுமணபுரி’ என்று உடனே பதில் அளிப்பார். பொறியியல் கல்வியில் அவருக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தப்படுவதில்லை.

ஆனால், அவர் ஆரம்பக் கல்வியின்போதோ அல்லது பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வின்போது, இந்தியாவில் உள்ள மாநிலத் தலைநகர்களின் பெயர்களை உருப்போட்டு, தேர்வு எழுதி அந்தப் பாடத்தில் குறைந்தபட்சமோ அல்லது அதிகபட்ச மதிப்பெண்களையோ பெற்றிருப்பார். அதுபோல, இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றி அடிப்படை அறிவைப் பெற்றிருப்பார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குறித்து அடிப்படை அறிவே இல்லாமல் இன்று 70 சதவீத மாணவர்கள் உள்ளனர் என்று ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதுகுறித்து போதிய ஞானம் இல்லை என்று கல்வித் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. என்றழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 6,722 பள்ளிகளில் படிக்கும் 24,486 ஆசிரியர்கள் மற்றும் 1,88,647 மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தி, கேள்விப் படிவங்கள் அளித்து, அவற்றைப் பூர்த்திசெய்து பெற்று இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

8-ஆம் வகுப்புப் படிக்கும் 70 சதவீத மாணவர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்துத் தெரியவில்லை. 55 சதவீத மாணவர்கள் உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் என்று மனதில் நிறுத்திக் கொண்டுள்ளனர்.
45 சதவீத மாணவர்களுக்கு ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றித் தெரிந்திருக்கிறது. (ஒவ்வொரு வகுப்புத் தேர்விலும் இக் கேள்வி நிச்சயமாக இடம்பெறும் என்பதால் இருக்குமோ?) 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு நாட்டில் ஓடும் நதிகளைப் பற்றித் தெரிந்திருக்கிறது. பொருள் உற்பத்தியில் பொதுத் துறை, தனியார் துறை நிறுவனங்களின் பங்கு என்ன? மனிதன் உயிருடன் வாழ ஆக்சிஜன் அவசியம் தேவை என்பதெல்லாம் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தெரியவில்லை. இதை கற்றலில் பிழை என்று எடுத்துக் கொள்வதா? கற்பித்தலில் குறைபாடு எனக் கொள்வதா?

தற்போது மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதில் தெரிந்துகொள்வதைவிட, சமூக வலைதளங்களின் மூலம் ஏராளமான விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆசிரியர்களுக்குத் தெரியாத பல விஷயங்களையும் மாணவர்கள் அறிந்துவைத்துள்ளனர்.

ஸ்மார்ட் வகுப்புகள் இன்று பல பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. புத்தக அறிவை விட, வெளி உலகை அறிவை அறிந்துகொள்வதற்கு தனியார் பள்ளிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில், அடிப்படை அறிவில் பலர் பூஜ்யமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சிலர் சில பாடங்களை தேவையில்லை என்று ஒதுக்குகின்றனர். அது வேறு. அடிப்படை அறிவு என்பது வேறு. அடிப்படை அறிவை அனைவரும் பெறுவது அவசியமாகும். அடிப்படைக் கல்வியிலேயே இப் பாடங்களைக் கற்க மறுப்பது அல்லது விருப்பமின்மை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அழகல்ல. இது கல்வியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை மணியாகும். நமது மூதாதையர்கள் இல்லாமல் நாம் இல்லை. அதுபோல, அவர்கள் வாழ்ந்த காலத்தையும், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும் நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

உலக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றியும், கரிகாலன் கட்டிய கல்லணை பற்றியும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் குறித்தும், அறிந்து வைத்துக்கொள்வதில் தவறில்லை. இவை குறித்த அறிவை மாணவர்களுக்கு எந்த வகையில் போதிப்பது என்பது குறித்து ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் சிந்திப்பது அவசியமாகும்.

என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவை ஒரு முன்னெச்சரிக்கை ஆய்வாக எடுத்துக்கொண்டு, கல்வியாளர்கள், திட்டம் வகுப்போர் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. விழித்துக் கொள்வார்களா?

Close