நாடு முழுவதும் ஜன.8-இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

18534821-stop-working-quit-job-or-getting-retirement-plan-or-fund-No-more-work-stress-Take-a-break--Stock-Photoவங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி 2016-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:இந்த ஆண்டு மே மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஷரத்துகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான, “ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்’, “ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா’ ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை தன்னிச்சையாக முடிவு செய்தன. இது சட்டத்துக்கு முரணானது. எனவே இந்த முறையைக் கைவிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 1,2 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் டிசம்பர் 1, 2-இல் நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

நாங்கள் பொறுப்பல்ல…: ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்ட விரோதப் போக்கை வாபஸ் பெற அந்த 5 வங்கிகளின் நிர்வாகங்கள் மறுத்து விட்டன. இதனால் வரும் ஜனவரி 8-இல் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்போது வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால் அதற்கு 5 வங்கிகளின் நிர்வாகங்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 3,50,000 வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.

Close