சவூதி அரேபியாவிலேயே பெட்ரோல் விலை அதிரடியாக 40% அதிகரிப்பு!

29-1451358530-petrol-price1-600உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத விலை உயர்வை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரூ. 6500 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டைத் தொடர்ந்து இந்த விலை உயர்வை சவூதி அரசு அறிவித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலுக்கான மானியத்தையும் சவூதி அரசு ரத்து செய்யப் போகிறது. பல அரசு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கவும் அது முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக பட்ஜெட் பற்றாக்குறை இந்த அளவுக்கு அதிகமாக வந்துள்ளது. ஆனால் இது பரவாயில்லை. சர்வதேச நிதியம், சவூதி அரேபியாவில் 130 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று முன்பு கணித்திருந்தது. அந்த அளவுக்கு தற்போது பற்றாக்குறை வரவில்ல என்பது ஆறுதலான விஷயமாகும். கடந்த ஆண்டு மத்தியிலிருந்தே சவூதி அரேபியாவில் வருவாயில் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை அடியோடு குறைந்ததே இதற்குக் காரணம். கடந்த ஆண்டு மத்தியிலிருந்து இதுவரை பேரல் ஒன்றுக்கு 40 டாலர் அளவுக்கும் கீழே குறைந்து விட்டது எண்ணெய் விலை. இது சவூதிக்கு மிகப் பெரிய அடியாக அமைந்து விட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்தே பெட்ரோல் விலையை உயர்த்த சவூதி அரசு திட்டமிட்டது. அதன்படி பெட்ரோல் பம்ப்புகளில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது, 0.90 ரியால் உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம், குடிநீர், டீசல், கெரசின் ஆகியவற்றுக்கான மானியத்தையும் சவூதி அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. சவூதி அரசின் முக்கிய வருமானமே பெட்ரோலியப் பொருட்கள்தான். அதிலிருந்துதான் அரசின் வருமானத்தில் 80 முதல் 90 சதவீதம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் சவூதி அரசிடம் 700 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நிதி இருப்பு உள்ளது. எனவே தேவைப்பட்டால் அதிலிருந்து எடுத்துப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க முடியும்.

Close