சவூதியில் ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

sa-lgflagசவூதியில் 47 மரண தண்டனைக் கைதிகளுக்கு ஒரே நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.

அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஷியா பிரிவு மதத் தலைவர் ஷேக் நிமர் அல்-நிமரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை சவூதி அரசுத் தொலைக்காட்சியும் உறுதி செய்தது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 45 பேர் சவூதி அரேபியர்கள் எனவும், மற்ற இருவரும் சாட் மற்றும் எகிப்து நாட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் புரட்சி மேற்காசிய நாடுகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு பரவியது.

அப்போது, சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான சிறுபான்மை ஷியா பிரிவினரின் போராட்டத்தை ஷேக் நிமர் அல்-நிமர் முன் நின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது, ஷியா பிரிவினர் அங்கம் வகிக்கும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் சர்ச்சையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் 157 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கைதிகளின் தலைகளைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Close