சென்னை விமான நிலையத்தில் ஜப்பான் வாலிபர் ரகளை!!

Chennai international airport_0டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜப்பான் வாலிபர், விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஜப்பான் வாலிபர் ரகளை
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அதில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நென்சி (வயது 28) என்பவர் வந்திறங்கினார். விமான நிலையத்தில் இறங்கியதும் அவர், பாதுகாப்பு பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டு இருந்தார்.

இதை கண்ட மத்திய தொழிற்படையினர் அவரிடம் விசாரிக்க சென்றனர். அப்போது ஜப்பான் வாலிபர், திடீரென ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மத்திய தொழிற்படையினர், அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு:
போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் ஜப்பான் வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், ஜப்பானில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த நென்சி, டெல்லியில் இருந்து சென்னை வந்த பிறகு என்ன செய்வது? என்று தெரியாமல் பயத்தில் ரகளை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தூதரக அதிகாரிகளிடம் நென்சியை விமான நிலைய போலீசார் ஒப்படைத்தனர். நென்சி, மீண்டும் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Close