தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் நவீன தானியங்கி எந்திரம் அறிமுகம்!!

201601040026414659_Learners-train-stationModern-ticketing--The-introduction_SECVPFதஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் நவீன தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மற்றும் பணம் செலுத்தி இந்த எந்திரம் மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தஞ்சை ரெயில் நிலையம்

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். தஞ்சையில் இருந்தும். தஞ்சை வழியாகவும் சென்னை, ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், காரைக்கால், எர்ணாகுளம், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, திருப்பதி, பெங்களூரூ போன்ற இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பயணிகள் ரெயிலும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தஞ்சை வழியாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் இந்த பகுதியில் தான் புகழ்பெற்ற கோவில்கள், தர்கா, கிறிஸ்தவ ஆலயங்கள் இருப்பதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தில் சென்று வருகிறார்கள்.

இதில் தஞ்சை ரெயில் நிலையத்தில் முகப்பு பகுதியிலும், பின்புற வழியாகவும் டிக்கெட் கொடுக்கும் மையங்கள் உள்ளன. முன்பகுதியில் உள்ள முன்பதிவில்லா டிக்கெட் கொடுக்கும் இடத்தில் 3 மையங்களும், முன்பதிவு செய்யும் இடத்தில் 2 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தட்கல் முறையில் டிக்கெட் எடுக்கும் மையமும் ஒன்று உள்ளது.

டிக்கெட் வழங்கும் எந்திரம்

இந்த மையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் மையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் மிகவும் சிரமப்படுவார்கள். இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை அறிமுகப்படுத்தியது. இந்த எந்திரம் தஞ்சை ரெயில் நிலையத்தில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் டிக்கெட் எடுப்பதற்கு, அங்குள்ள டிக்கெட் வழங்கும் மையங்களில் பணம் செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற வேண்டும். அதாவது ரூ.100 செலுத்தினால் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதில் 50 ரூபாய் டெபாசிட் கணக்கில் சேர்க்கப்படும். மீதமுள்ள 50 ரூபாய்க்கு நீங்கள் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் டிக்கெட் பெறும் போது உங்கள் தொகையில் இருந்து கழித்துக்கொள்வார்கள்.

பணம் தீர்ந்து விட்டால் நீங்கள் மீண்டும் ஸ்மார்ட் கார்டை ரீசார்ஜ் செய்து டிக்கெட் பெறலாம். அதாவது டிக்கெட் வழங்கும் மையத்தில் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தி வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதிக பட்சமாக ரூ.4 ஆயிரம் வரை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் ரூ.100 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் உங்கள் கணக்கில் ரூ.105 மதிப்புள்ள டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 50 ரூபாய் செலுத்தினால் ரூ.52-க்கு டிக்கெட் பெறலாம். ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கூடுதலாக ரூ.5 உங்கள் கணக்கில் சேரும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அது 1 வருடம் வரை செல்லும்.

நவீன எந்திரம் அறிமுகம்

தற்போது புதிதாக இன்னொரு நவீன எந்திரம் தஞ்சை ரெயில் நிலையத்தில் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் நீங்கள் ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறலாம். பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியும் உள்ளது. இந்த எந்திரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் முக்கிய மான பயண தூரம் பற்றிய வரைபடம், எந்திரத்தில் உள்ள திரையில் தெரியும். நீங்கள் செல்லும் இடத்தை தேர்வு செய்தால், அதில் பயணிகள் ரெயில் என்றால் எவ்வளவு, எக்ஸ்பிரஸ் ரெயில் என்றால் கட்டணம் எவ்வளவு என்பது தெரிய வரும்.

நீங்கள் அந்த கட்டணத்தை செலுத்தினால் உங்களுக்கு டிக்கெட் கிடைக்கும். திரையில் உள்ள வரைபடத்தில் இல்லாத ஊர்களையும் நீங்கள்தேர்வு செய்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இந்த எந்திரத்தில் நீங்கள் எவ்வளவு டிக்கெட் கட்டணமோ? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். கூடுதலாக பணம் செலுத்தினால் திருப்பி வந்துவிடும். டிக்கெட் 70 ரூபாய் என்றால் நீங்கள் 70 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். 100 ரூபாயாக செலுத்தக்கூடாது. சில்லறையாகவும் செலுத்தலாம். பணம் செலுத்துவதற்கு தனி வசதியும், சில்லறை செலுத்துவதற்கு தனி வசதியும் உள்ளது.

பயணிகளுக்கு வரப்பிரசாதம்

மேலும் இந்த எந்திரத்தில் சீசன் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இந்த எந்திரத்தில் சலுகை கட்டணங்கள் மூலம் எந்தவித டிக்கெட்டும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. மேலும் வரிசையில் நின்று காத்திருக்காமல் வந்தவுடன் பணத்தை செலுத்தி டிக்கெட் பெற்றுச்சென்று விடலாம். இதனால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியாவில் இந்த எந்திரம் உள்ள எந்த ரெயில் நிலையத்திலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். அதே போல் இந்த எந்திரம் உள்ள ரெயில் நிலையத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளாம். இதே போல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நவீன எந்திரம் கேரளாவில் உள்ள ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளது. அது போன்ற எந்திரத்தை தஞ்சை ரெயில் நிலையத்தில் வைக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டுள்னர்.

Close