தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா!

201601100112162193_Tamilppalkalaikkalakam-2281-Alumni-Governor-degree-errand_SECVPF

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்றார்.

விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் 114 மாணவர்களுக்கு முனைவர்பட்டமும், 238 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 35 மாணவர்களுக்கு கல்வியியல் நிறைஞர் பட்டமும், 18 மாணவர்களுக்கு முதுநிலை பட்டமும், 97 மாணவர்களுக்கு இளங்கல்வியியல் பட்டமும், தொலைநிலைக்கல்வி மூலம் படித்த 1,779 மாணவர்களுக்கும் என மொத்தம் 2,281 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நவீன ஆங்கிலம்:

1400-1500 ஆண்டுகளுக்கு பிறகு சொற்களின் உச்சரிப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தால் நவீன ஆங்கிலம் உருவாகியது. தொழிற்புரட்சியாலும், தொழில்நுட்பத்தின் பெருக்கத்தாலும் ஆங்கிலம் பல்வேறு சொற்களை உருவாக்கி தன்னை புதுப்பித்துக்கொள்ள தொடங்கியது. இன்றும் ஆங்கிலத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் ஆங்கில சொற்கள் அல்ல. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. எனவே தோன்றிய இடத்திலேயே தேங்கி விடாமல் நாள்தோறும், நாடுதோறும் ஓடிக்கொண்டே இருந்து வெற்றியை தனதாக்கிக்கொண்ட மொழி ஆங்கிலம். இந்த பாடத்தை நாம் ஓரளவு கற்றுக்கொண்டோமேயானால் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும்.

கலைக்களஞ்சியம்:

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இன்னும் பதிப்பிக்காமல் உள்ள நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளையும், கையெழுத்து சுவடிகளையும் படித்து, ஆய்ந்து அவற்றை பதிப்பித்தால் அது வருங்கால சமூகத்திற்கு இந்த பல்கலைக்கழகம் செய்யும் மாபெரும் தொண்டாகும். ஒரு காலத்தில் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், மெய்யியல், பொருளியல் ஆகிய அனைத்து துறை சார்ந்த அறிவையும் உள்ளடக்கிய ஒரே கலைக்களஞ்சியமாக பிரிட்டானியா கலைக்களஞ்சியம் போன்ற கலைக்களஞ்சியங்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது அறிவுலகின் விரிவாக்கத்தின் பின்னால் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனி கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தமிழ்மொழியில் உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்:

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மூ.ராசாராம், பரசுராமன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Close