அதிரை மருத்துவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அதிரை ஜஃபருல்லாஹ் அவர்களின் வேண்டுகோள்!

அன்பின் அதிரை மருத்துவர்களே, சமூக ஆர்வலர்களே.. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

சமீபத்தில் தமிழகமே டெங்கு, சிறுநீர் தொற்று, மற்றும் இதர கிருமி நோய்களால் அவதியுற்றுக் கொண்டு இருக்கிறது. இது அதிரையையும் விட்டு வைக்கவில்லை. தினமும் இதுகுறித்து ஒவ்வொரு தகவல்களாக கேள்விப் பட்டுக்கொண்டு இருக்கிறோம்.முதியவர்கள், குழந்தைகள் என்று பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்தால் நிலைகுலைந்து போய்விடுவார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன்.

இந்த நிலையில் குறிப்பாக டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்களுக்கு நன்கு தெரியும், இதன் அறிகுறி, ஆரம்பம் என எல்லாம் அறிந்தவர்கள் மருத்துவர்கள். எனக்கு தெரிந்தவரை. டெங்கு காய்ச்சல் சில நேரங்களில் இரத்த சோதனையில் தாமதமாகவே தெரியவரும் என்று சில மருத்துவர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே. முதல் இரத்த சோதனையில் தெரியாதபோதும் மீண்டும், டெங்கு மற்றும் சிறுநீர் தொற்று மலேரியா, டைஃபாய்டு உள்ளிட்ட ஆபத்தான காய்ச்சல்களை ஒன்றுக்கு இரு முறை இரத்தம் / சிறுநீர் சோதனைகளை செய்து பார்த்து நோயாளிகளின் தற்போதைய நிலையை நீங்கள் உணர்ந்து மருத்துவம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அதிரையில் பல மருத்துவர்கள் இருந்தும், தாமதமான நிவாரணம் சிலர் வெளியூரை நாடி செல்ல வேண்டியுள்ளது. வசதி படைத்தவர்கள் வெளியூரில் காஸ்ட்லியான மருத்துவம் பெற்று நிவாரணம் பெறலாம். ஆனால் வசதியற்றோர் என்ன செய்வார்கள் ? குறிப்பாக ஏழைகளின் நிலையுணர்ந்து அவர்கள் மீது சில சலுகைகளை காட்டி மருத்துவம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நோய் வசதி பார்த்து வருவதில்லை. சில நேரங்களில் மருத்துவர்களுக்கே சவால் விடும் நோய்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே தயவு கூர்ந்து அதிரையின் மக்களின் நலன் வேண்டி இதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்:

அதிரையின் தன்னார்வலர்களின் செயல் சமீபத்தில் ஊருக்கு நற்செயல் செய்வதில் காட்டும் ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது. எனவே தன்னார்வலர்களான நீங்களும் இதில் அதிக கவனம் செலுத்தி நோயற்ற அதிரையை உருவாக்க அவசர கால நடவடிக்கையாக காலம் தாழ்த்தாது இதில் கவனம் செலுத்தி இதில் உங்களால் என்ன செய்ய இயலும் அதனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்: 

தொடர்ந்து பலமுறை அறிவுறுத்தியும், குப்பைகளையும், அசுத்தங்களையும் வளரவிடுவதில் பொதுமக்கள் முன்னோடியாக இருக்கிறோம். இதனை தயவு செய்து தவிர்க்கவும். இதன் பின் விளைவுகள் நமக்குத்தான் என்பதை உணர வேண்டும். அதிரை பேரூராட்சி ஊரை சுத்தம் செய்வதில் குப்பைகளை அகற்றுவதில் முனைப்பு காட்டினாலும் பொதுமக்களின் ஆதரவு இல்லையேல் என்ன கூறியும் பலனில்லை.

சுத்தம் பேணுவோம்.. சுகாதாரமான நோயற்ற வாழ்வை வாழ்வோம்.
வஸ்ஸலாம்.

அன்புடன்,
ஜஃபருல்லாஹ்,
ஜித்தா

Advertisement

Close