முஸ்லிம்களுக்கு 12 சீட்டுகள் கேட்டு திமுக தலைமையை அதிர வைத்த முஸ்லிம் லீக்!

imageசட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக விழுப்புரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ் வரவேற்றார்.

பொதுச் செயலர் அபுபக்கர், முன்னாள் எம்பி அப்துல்ரகுமான், மாநிலச் செயலர்கள் மஜீத், ஷாஜகான் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்பியுமான காதர்மைதீன் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் முஸ்லிம் பண்டிகையை தலைமை ஹாஜி அறிவிக்கும் நாளை பின்பற்றாமல் பலர் விருப்பம் போல் கொண்டாடுகின்றனர்.

போட்டி ஜமாத்துகளை வைத்துக்கொண்டு மதத்துக்கு எதிராகவும், முஸ்லிம் அமைப்புகளை பிளவுபடுத்துகிற வகையிலும் பலர் செயல்படுகின்றனர். இதனை ஒருங்கிணைக்கவே ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்படுகிறது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும், பள்ளிவாசல்களில் பதியப்படும் திருமணப் பதிவையும் அரசு ஏற்க வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறுபான்மை அந்தஸ்தை அபகரிக்க முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும். கூட்டணியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

பாஜக-திமுக கூட்டணி அமைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, அதுக்கு ஒரு போதும் வாய்ப்பில்லை என்றார்.

Close