திருச்சி ஏர்போர்ட்டில் துபாயில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட தொழிலாளியின் சடலம்!

12662562_891170244333182_1000820680743313291_n

துபாயில் எலும்பு கூடாக மீட்கப் பட்ட தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து திருச்சி ஏர் போர்ட்டில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த கலிய பெருமாள் மகன் ராமதாஸ் (31). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 மாதமாக ராமதாஸ் உறவினர்களுடன் எந்த தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு துபாயில் வேலை பார்த்த நிறுவனம் மற்றும் உடன் பணிபுரிந்த நண்பர்கள் ராமதாஸை காணவில்லை என தெரிவித்துள்ளனர். இதில் மனமுடைந்த உறவினர்கள் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து ராமதாஸ் வேலை பார்த்த தனியார் நிறுவனம் போலீசில் புகார் செய்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனர்.

இந் நிலையில் கடந்த 18ம் தேதி அங்குள்ள பாலைவனத்தில் எலும்பு கூடாக கிடந்த உடலை மீட்ட போலீசார் அடையாள அட்டை, செல்போன் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன ராமதாஸ் என்பது தெரியவந்தது. இது குறித்து ராமதாஸ் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.இதையடுத்து கடந்த 26ம் தேதி அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் தந்தை கலிய பெருமாள் கொடுத்த மனுவில், தனது மகன் கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும், அவரது உடலை இந்திய தூதரகத்தின் மூலம் மீட்டு நிவாரணம் வழங்க கோரியிருந்தார்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ராமதாஸ் உறவினரகளிடம் முன் அறிவிப்பு இல்லாமல் துபாயில் இருந்து ராமதாஸ் உடலை நேற்று முன் தினம் இரவு திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அதிகாலை உடல் விமான நிலையம் வந்தததும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், ராமதாஸ் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் விமான நிலையத்திலேயே உடல் வைக்கப் பட்டது.

இது குறித்து ஏர் போர்ட் போலீசாருக்கு விமான நிலைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ராமதாஸ் உறவினர்களி டம் செல் போன் மூலம் பேசியபோது, ராமதாஸ் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு கிடைக்க வேண்டிய நிவாரண நிதியை பெற்று தந்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்றனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் ராமதாஸ் உறவினர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப் படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.நேற்று மதியத்திற்கு பின் போலீசார் உதவியுடன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மட்டும் வெளி நாடுகளில் இருந்து விமான மூலம் இறந்தவர்களின் 4 பேர் உடல்கள் திருச்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Close