இனிக்கும் இல்லறம்-4

இளைஞர் ஒருவர் தனது திருமணப் பிரச்சனை தொடர்பாக கவுன்சலர் ஒருவரை அணுகினார். அவரது பிரச்சனையை குறித்து விசாரித்து அறிந்தார் கவுன்சலர். இளைஞர் தனக்கு பிடித்தமான பெண்ணொருத்தியை திருமணம் செய்ய விரும்புவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தாயாருக்கோ அப்பெண்ணின் பாணியும், பண்பாடும் பிடிக்கவில்லை. எனவே அவரை திருமணம் புரிவதை தான் விரும்பவில்லை என இளைஞரிடம் கறாராக தெரிவித்துவிட்டார். இந்நிலையில்தான் அவ்விளைஞர் கவுன்சலரை அணுகி எவ்வாறு தனது திருமண விவகாரத்தில் தாயின் சம்மதத்தை பெறுவது என்பது குறித்து ஆலோசனை கேட்டார்.
கவுன்சலர் அவ்விளைஞனிடம், ‘உனது தாயின் பாணியைக் கொண்ட, அவரது உணவு, உடைக் காலாச்சாரத்தை அப்படியே பின்பற்றும் குணமுடைய பெண்ணை கண்டுபிடித்து திருமணம்புரிய அனுமதி கேட்குமாறு ‘ஆலோசனை வழங்கினார். சில நாட்கள் கழித்து கவுன்சலரை வந்து சந்தித்த இளைஞர் இனிப்பை வழங்கியவாறு, கவுன்சலரின் ஆலோசனையின்படி தனது தாயின் விருப்பத்திற்கேற்ற பெண்ணை தெரிவுச் செய்து திருமணம் புரிவதற்கான அனுமதியை பெற்றுவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கவுன்சலரும் தனது ஆலோசனையின்படி ஒரு இளைஞனுக்கு நல்லது நடந்துள்ளது என திருப்தி அடைந்தார். கொஞ்சநாட்கள் கழித்து அவ்விளைஞனை எதேச்சையாக சந்தித்தார் கவுன்சலர். அவரது முகத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக சோகமே இழையோடியது.
ஆச்சரியமடைந்த கவுன்சலர் இளைஞனிடம் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா? என வினவினார்.. அவ்விளைஞனோ, ’எனக்கு இதுவரை திருமணமே ஆகவில்லை. உங்களின் ஆலோசனையின்படி தாயார் விரும்பும் வகையில் ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரது அனுமதியைப் பெற்றேன். ஆனால் எனது தந்தைக்கு அப்பெண்ணை பிடிக்கவில்லை. எனது தந்தை, ’உனது தாயாரின் குணநலனைப் போன்ற பெண்ணை தேர்வுச் செய்துள்ளாயே! உனக்கு வேறுபெண் கிடைக்கவில்லையா?உனது தாயாருடன் நான் 28 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டேன். அதில் நான் பட்ட கஷ்டங்கள் போதாதா? நீயும் அவளைப் போன்ற குணமுடைய பெண்ணை திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையில் இனிமையை இழக்கவேண்டுமா?’ என கேள்வி எழுப்பி அப்பெண்ணை திருமணம் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார்’ என கவலையுடன் கூறிய இளைஞனுக்கு என்ன ஆலோசனை வழங்குவது என்று தெரியாமால் கவுன்சலர் குழம்பிப் போனார்.
28 ஆண்டுகள் இல்லறம் நடத்திய தம்பதியினர் மத்தியில் எவ்வித ஒட்டும், உறவும் இருக்கவில்லை. கடமைக்காக, சடங்கிற்காக, ஊர்-உலகத்திற்காக கணவன் – மனைவியாக வாழ்க்கையை நடத்தியுள்ளார்கள். உண்மையில் 28 ஆண்டுகளை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இது ஒரு உதாரணம்.
இன்றைய உலகில் இவ்வாறு பரஸ்பரம் புரிந்துணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இன்றி, ஈகோவை வளர்த்துக்கொண்டு எத்தனையோ தம்பதியினர் வாழ்க்கை பயணத்தை தொடரத்தான் செய்கின்றனர்.
இப்பொழுதுநாம் முந்தைய தொடரில் கண்ட குறுக்கு வழிகளை குறித்து விவாதிப்போம்.
நமக்கு இவ்வுலகில் காற்று மட்டுமே இலவசமாக கிடைக்கிறது. குடிநீர் குப்பிகளில் அடைக்கப்பட்டு ப்ராண்ட் ஆக மாற்றப்பட்டதை தொடர்ந்து எங்கேயும், எப்பொழுதும் குடிநீர் இலவசமாக கிடைக்காத சூழல் உருவாகி வருகிறது. அவ்வாறெனில் அன்பிற்கும் விலை பேச வேண்டுமா? என நீங்கள் கேட்கலாம். பதில் –  ஆம் விலை கொடுத்தே தீரவேண்டும். ஆனால் கரன்சியாக அல்ல. நன்றியுணர்வின் மூலமாக. இலவசமாக ஒன்றை அடைவது மட்டும் தத்துவ ரீதியாக சரி அல்லவே! அன்பு கிடைக்கவேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். ஆகையால் அன்பை பெறுவது மட்டுமல்ல பிறருக்கு கொடுக்கவும் வேண்டும்.
கணவன்-மனைவி இடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்பட ஒரு எளிய வழி.
உங்கள் வீட்டின் ஹாலில் அல்லது அறையில் ஒரு goal chart ஐமாட்டுங்கள். உதாரணமாக
கணவன் – மனைவி மட்டுமல்ல ஒருகுடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த chart-ஐ பயன்படுத்தலாம். ஒவ்வொருவரும் தங்களது பெயரை எழுதி அவரவர்களின் விருப்பங்களை எழுதிக்கொள்ளலாம். மேலே குறிப்பிடதைப் போன்றோ அல்லது மேலும் சில விஷயங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் அறியாமலேயே உங்களிடையே ஒரு கம்யூனிகேசன் நெட்வர்க் உருவாகிவிடும். சிறிது நாட்கள் கழிந்த பிறகு பரஸ்பரம் புரிந்துகொள்ள மிகவும் எளிதான, ரசனையான வழிமுறை என்பதை புரிந்துக் கொள்வீர்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்.
இப்பொழுது ஒரு கேள்வி கணவன்- மனைவி அல்லது குடும்பத் தலைவர்- இல்லத்தரசி குடும்பத்தில் இவர்களின் ரோல் என்ன?
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Advertisement

Close