நாட்டில் முதல்முறையாக் திருநங்கை பிரித்திக்கா யசினிக்கு காவல்துறை பணி வழங்கப்பட்டது!

5சேலம்: நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர், உதவி காவல் ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை, நேற்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராகத் தேர்ச்சி பெற்ற 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் சுமித் சரண், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அப்போது, சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பை ப்ரித்திகா யாஷினி பெற்றுள்ளார்.

தற்போது பணி நியமன ஆணை பெற்ற உதவி காவல் ஆய்வாளர்களுக்கான பயிற்சி, சென்னை வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வருகின்ற 26-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஓராண்டு பயிற்சி பெற்ற பின் இவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிமயர்த்தப்படுவார்கள்.

பணி நியமன ஆணை பெற்ற பின் ப்ரித்திகா யாஷினி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”நாட்டிலேயே முதல் திருநங்கையாக உதவி காவல் ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகி உள்ளேன். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுவேன். முன்மாதிரி காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றுவேன். பதவி உயர்வு பெற்று ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்பது எனது லட்சியமாகும்

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும், அதற்காக நான் பாடுபடுவேன். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண் சிசுக் கொலைக்கு முன்னுரிமை கொடுத்து, இதுபோன்ற கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

Close