கோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்! சாலை விபத்தில் யாசின்கான், அப்துல்லாஹ் என்ற பள்ளி மாணவர்கள் மரணம்!

201602170115148973_Near-manamelkuti-awful-the-ambulance-carrying-the-body-of_SECVPFமணமேல்குடி அருகே இறந்தவரின் உடலை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலியானார்கள்.

பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். மீனவரான இவரது மனைவி பல்கீஸ் அம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் 3-வது மகன் யாசின்கான்(வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் சேக் அப்துல்லா(15). இவர்கள் இருவரும் மணமேல்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். யாசின்கானும், சேக் அப்துல்லாவும் தினமும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடிக்கு பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

நேற்று காலை வழக்கம்போல இருவரும் பள்ளிக்கு பஸ்சில் செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர். அப்போது அந்த சாலையில் மணமேல்குடி வழியாக செல்லும் அரசு பஸ்கள் எதுவும் நின்று மாணவர்களை ஏற்றி செல்லவில்லை.

இதனையடுத்து பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால் வேறு வழியின்றி யாசின்கான் தனது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு பள்ளிக்கு சேக் அப்துல்லாவுடன் புறப்பட்டார்.

ஆம்புலன்ஸ் மோதியது

மோட்டார் சைக்கிளை யாசின்கான் ஓட்டினார். சேக் அப்துல்லா பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதிபட்டினம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து மூவனூரைச் சேர்ந்த ஆத்மநாதன் உடலை ஏற்றி வந்த தனியார் ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக யாசின்கான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சாலை ஓரம் இருந்த முட்புதருக்குள் சென்று சாய்ந்தது. ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் உடைந்து நொறுங்கியது.

2 மாணவர்கள் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யாசின்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற சேக் அப்துல்லா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விபத்தில் பலியான மாணவர் யாசின்கானின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணமேல்குடி அருகே இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம்¢ அப்பகுதியில்¢ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Close