45 ஆண்டு கால உழைப்பு: இந்தியாவின் முதல் அணுஆயுத நீர் மூழ்கிக் கப்பல் அரிஹந்த் தயார்!

உ ள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்த், விரைவில் கடற்படையில் இணையவுள்ளது. கடந்த 5 மாதங்களாக கடல் நீர் அழுத்த சோதனை, ஆயுதங்களை ஏவி நடத்தும் சோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சோதனை நிறைவுற்று விட்டதால், பிரதமர் தலையசைத்ததும் முறைப்படி அரிஹந்த் கப்பற்படையில் இணைக்கப்படும்.
கடந்த 1970-ம் ஆண்டு உள்நாட்டிலேயே அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டது. 1985-ம் ஆண்டுதான் டிசைன் மற்றும் எந்த வகையிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதும் தீர்மானிக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு தனியார் நிறுவனமான எல் அண்டு டியுடன் இணைந்து கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. 2009-ம் ஆண்டு கட்டுமானப்பணிகள் முடிந்தது. 2013-ம் ஆண்டு நீர்முழ்கிக் கப்பலில் அணு உலை ஏற்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து தொடர் சோதனைகளில் அரிஹந்த் ஈடுபட்டு வருகிறது. அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. 700 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் மத்திய தர கே- 15 ரக ஏவுகணையை 12 வரை இதில் பொருத்தலாம். 3,500 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் கே-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நான்கும் அரிஹந்தில் இணைக்கப்படும். விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கட்டும் தளத்தில்தான் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் அரிஹந்த் கட்டப்பட்டது. ரஷ்யாவை சேர்ந்த அணுஆயுத நீர்முழ்கி கப்பலான ஆர்.எப்.எஸ். எப்ரான், தற்போது விசாகப்பட்டின கடற்பகுதியில் அரிஹந்துக்கு பயிற்சி அளித்து வருகிறது.கடலுக்கு அடியில் இருந்து அணுஆயுதங்களை ஏவுகணையை செலுத்துவதிலும் அரிஹந்த் தேர்ச்சி பெற்று விட்டது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு கட்ட ஆய்வுகள், சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அரிஹந்த் வெற்றி கண்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் அரிஹந்த் கப்பற்படையில் இணைக்கப்படலாம். அரிஹந்த் கடற்படையில் இணைக்கப்படும் பட்சத்தில் நீர், நிலம், ஆகாயம் என மூன்று வழியிலும் அணுஆயுதங்களை ஏவும் திறனை இந்தியா பெற்று விடும். மேலும் இரு அணுஉலை நீர்மூழ்கிக் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவிடம் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சக்கரா என்ற அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

IMG_1399.JPG

Close