இளைஞர்களே! உங்களுக்காக சில அறிவுரைகள் !

இன்றைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பவர்கள் இளைஞர்களேயாவார்கள், வெளிப்படையாக தெரியாவிட்டாலும் உண்மை என்னமோ இதுதான். எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு துறையினராலும் குறிவைத்து பயன்படுத்தப்படுபவர்களும் வாலிபர்களே! இதுபோன்று கடுமையான போட்டி நிலவக்கூடிய இவ்வுலகில் நமது இளைஞர்கள் விழிப்போடு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கல்வி:மாணவப்பருவத்தில் இருக்கக்கூடியவர்கள் தனது கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நிலவக்கூடிய போட்டி நிலவரங்களை எதிர்கொண்டு வெற்றிபெற தீவிர முயற்சி செய்தல் அவசியம். படிக்க வேண்டிய காலத்தில் தேவையற்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கல்வி பயிலும் காலகட்டத்திலிருந்தே நமது பாடசம்பந்தமான நூல்கள் மட்டுமின்றி இதர கல்விநூல்களையும் தேடி படிப்பதும் பழக்கவழக்கங்களில் சிறந்ததாகும். இஸ்லாம் கூறும் விஞ்ஞானத்தை படித்து அதை ஆராய முயற்சிகள் செய்வதோடு அதை தெரியாத மக்களுக்கு கொண்டுசேர்க்க பாடுபட வேண்டும்.
மார்க்க சிந்தனைகள்:மார்க்க அறிவுகளை கற்றுக்கொள்வதில் இளைஞர்கள் என்றும் தயக்கம் காட்டக்கூடாது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை சொந்த மொழியில் கற்று அதன்படி செயல்பட முயற்சி செய்தலிலும் ஆர்வம் காட்ட வேண்டும். மார்க்க சம்பந்தமான சட்டங்களை தெரிந்துவைத்து ஒவ்வொரு செயலிலும் அமுல்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு இளைஞனும் இஸ்லாமிய வரலாறுகளை கட்டாயமாக தெரிந்து வைத்திருத்தல் மிக இன்றியமையாததாகும். மார்க்க விஷயங்களிலோ, இஸ்லாத்தின் அழைப்புப்பணிகளிலோ சேவைகள் செய்துகொண்டிருக்கும் அணிகளில் கட்டாயமாக தங்களது பங்களிப்பை இளைஞர்கள் அளித்தாக வேண்டும்.
உடற் பயிற்சிகள்:விஞ்ஞான வளர்ச்சி இன்றைய வாலிபர்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்துவிட்டது என்ற பொதுக்கருத்து பரவலாக மக்கள் மத்தியில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது, என்னதான் உலக நடப்புகளுக்கேற்ப தன்னை இணையதளங்கள் மூலம் உயர்த்திக்கொண்டாலும் தனது உடல் சார்ந்த பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் அன்றாடம் கடைபிடித்து வருதல் மிக முக்கியமான ஒன்றாகும். நாம் உடல் ரீதியில் பலத்துடன் இருக்கும் பட்சத்தில் மனரீதியாக நலமுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க முடியும் என்பது ஆராயப்பட்ட உண்மை. அதுபோல் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனிமையிலும் துன்பம் வரும்போது எந்த பயமுமின்றி பாதுகாத்துக்கொள்ள வாலிபர்கள் தற்காப்புக்கலைகளை கற்றுவைத்திருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சமுதாய சிந்தனைகள்:இன்றைய இளைஞர்கள் நாட்டுநடப்புகளையும் உலகநடப்புகளையும் தெரிந்துவைத்திருப்பது மட்டுமின்றி அதைப்பற்றிய சிந்தனைகள் செய்ய வேண்டும். அன்றாட வாழ்வில் நடைபெறும் பிரச்சனைகளை சட்டரீதியாக சந்திக்கும் முறையை தெரிந்து தீர்வுகாணும் தைரியம் இருத்தல் அவசியான ஒன்றாகும். உலகெங்கிலும் நடக்கும் அநியாயத்திற்கெதிராக துணிந்து போராடக்கூடிய மனநிலை இளைஞர்களுக்கு மத்தியில் வரவேண்டும். இரத்தம் துடிக்கும் இப்பருவத்திலேயே எந்த பிரதிபலனும் பாராமல் சமூகசேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும். முக்கியமாக சமுதாயத்தின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு செயல்படுதல் நமக்கு ஆரோக்யமான ஒன்றாக இருக்கும்.
நல்லொழுக்கங்கள்:
மேற்கூறிய எல்லாம் இருந்தும் ஒருவனிடம் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டால் இவைகளால் எந்த பயணும் இருக்காது. எனவே இளைஞர்கள் பெற்றோர்களுக்கு கண்ணியம் செலுத்துபவர்களாகவும், பெரியோர்களிடம் மரியாதையுடனும், சிறியோர்களிடம் அன்புகாட்டுபவர்களாகவும், வார்த்தைகளில் அழகானவர்களாகவும், குணங்களில் சிறந்தவர்களாகவும் இருந்திட வேண்டும்.
நமது இளைய சமுதாயத்தினர் மேற்குறிப்பிட்ட சில விஷயங்களில் கூர்மையுடன் விளங்கும் பட்சத்தில் தமது மறுமை வாழ்வில் வெற்றிபெற உதவியாகவும், தன்னையும் தனது சமுதாயத்தையும் அழகான முறையில் வழிநடத்தக்கூடியவர்களாக திகழ்வதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆக்கம்:
S.A.M. முஹம்மது நாசர்.

Advertisement

Close