எஸ்.டி.பட்டினம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன? உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கை !

எஸ்.டி.பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர், போலீசார் அடித்ததால் சாவு உண்மை கண்டறியும் குழுவினர் அதிர்ச்சி தகவல்!

வாலிபர் சுட்டுக்கொலை:

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி. பட்டினத்தை சேர்ந்த செய்யது அகமது (வயது 22), கடந்த 14-ந் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, காவல் நீதி மற்றும் சித்திரவதை ஒழிப்பு பிரசாரம் அமைப்பை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். தாங்கள் நடத்திய கள ஆய்வு குறித்து வக்கீல்கள் விஜயசங்கர், காஜா முகைதீன், மனித உரிமை ஆர்வலர்கள் பாபு, மேத்யூஸ், இந்திரா ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அடித்துக் கொலை:

சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள இ.சி.ஆர். சாலையில், இருசக்கர வாகன மெக்கானிக் அருள்தாசுக்கும், செய்யது அகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, அருள்தாஸ் எஸ்.டி.பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரை தொடர்ந்து, 2 போலீசார் வந்து செய்யது அகமதுவை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசுக்கும், செய்யது அகமதுவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, போலீசார் அனைவரும் லஞ்சம் வாங்குவதாக செய்யது அகமது குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், கோபமடைந்த போலீசார் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதில், செய்யது அகமது இறந்துவிட்டார். இதை மறைக்க இறந்தவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர், செய்யது அகமது கத்தியால் குத்த முயன்றபோது தற்காப்புக்காக சுட்டதாக நாடகமாடியுள்ளார்.

இந்த தகவலை காவல்துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழு, செய்யது அகமதுவின் உறவினர்கள் ஆகியோரிடம் நடத்திய விசாரணை மூலம் தெரிவிக்கின்றோம். 

Advertisement

Close