Dr.Pirai-ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை தேநீர்!

dr.pirai_

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகைகளின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். தற்போது தேர்வு கால கட்டம். இன்றைய கால கட்டத்தில் எல்கேஜி தொடங்கி உயர் கல்விவரை மாணவர்கள் எத்தனை வகையான தேர்வுகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இது மாணவர்களை மட்டுமின்றி பெற்றோரையும் ஆட்டி படைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்வதற்கு வல்லாரையை பயன்படுத்தி தேநீர் ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள், வல்லாரை கீரை, வசம்பு, மஞ்சள் பொடி, அரிசி திப்பிலி, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.

வல்லாரை கீரையை நீர் விடாமல் அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை 10 முதல் 20 மில்லிவரை எடுத்துக் கொள்ளலாம். வசம்பை பொடி செய்து 2 அல்லது 3 சிட்டிகை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு விரல் கிடை அளவு மஞ்சள் பொடி, இவற்றுடன் 2 திப்பிலியை சேர்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும்.

இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வடி கட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சிய பாலை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் பருக கொடுக்கலாம். வல்லாரை இலை மிகுந்த ஞாபக சக்தியை அளிப்பதாக உள்ளது.

இதை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் மூளை புத்துணர்வும் அடைகிறது. இதனுடன் வசம்பை சேர்ப்பதன் மூலம் இது நரம்புகளுக்கு பலத்தை தருவதாக அமைகிறது.

அதே போல் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சோர்வை போக்கக் கூடிய தேநீர் ஒன்றை அதிமதுரத்தை கொண்டு தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் அதிமதுர பொடி, பாதாம் மிக்ஸ், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.அதிமதுர பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் குழந்தைகள் விரும்பும் வகையில் 2 ஸ்பூன் பாதாம் மிக்ஸ், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு சுவைக்காக இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இதை வடிகட்டி விட்டு காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும். இதை குழந்தைகள் பருகுவதால் தேர்வு பயம் நீங்கி அவர்களது மன அழுத்தம் விலகுகிறது. அதிமதுரம் மூளைக்கு பலத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். இதில் கலந்திருக்கும் கிளிசரின் என்ற ரசாயனம் இதற்கு இனிப்பு சுவையை கொடுக்கிறது.

ஞாபக சக்தியை தூண்டக் கூடியதாக அதிமதுரம் விளங்குகிறது. அட்ரினல் சுரப்பிகளை தூண்டி சீராக வேலை செய்ய வைக்க கூடியது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளக் கூடியது. இதனுடன் பாதாம் மிக்சை சேர்க்கும் போது நமக்கு அதிகமான புரத சத்து கிடைக்கிறது.

Close