முஸ்லிம்களும் தமிழ் சினிமாவும்! (எடிட்டர் அலாவுத்தீன் அவர்களின் கட்டுரை)

1992 பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக படங்கள்
வரத்தொடங்கின.மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை
வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. பின்னர் 1995 அதே
மணிரத்தினம் பம்பாய் திரைப்படத்தில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை ஒவ்வொரு
காட்சியிலும் காட்டினார்.

“பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது” எனக் குற்றம் சாட்டினார் வழக்கறிஞர் பல்கிவாலா. போலீஸ்
துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.

ஆனால் மணிரத்னம்
காட்டும் கலவரக் காட்சிகளில் முஸ்லிம்கள் போலீசைத் தாக்குகின்றார்கள். ஒரு
வண்டிக்குத் தீ வைத்து போலீசின் மேல் தள்ளி விடுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு
நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட நரவேட்டையாடிய போலீசிடமிருந்து
தங்களைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.

ரோஜா படத்தில்
மணிரத்னம் தொடங்கிவைத்த சினிமா வன்முறை பலராலும் பின்பற்றப்பட்டு விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேசபக்தி (?) நடிகர்களால் மென்மேலும்
வளர்த்தெடுக்கப்பட்டது.நரசிம்மா என்ற படத்தில் விஜயகாந்த், ‘இந்தியாவில் முஸ்லிம், கிரிக்கெட் கேப்டனாக (அசாருதீன்), மாநில ஆளுநராக (பாத்திமா பீவி)
வரமுடியும்; பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாது” என்று தேசபக்தி வசனம் பேசுவார்.

ஜக்குபாய் என்ற
ரஜினி படத்தின் விளம்பரம் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது போல இருந்ததற்கு
தமுமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு அந்தப் படமே கைவிடப்பட்டது.

பின்னர் கமலின்
உன்னைப்போல் ஒருவன்,விஸ்வரூபம், விஜயின்
வேலாயுதம்,துப்பாக்கி போன்ற படங்கள்  பயணம் என்ற
திரைப்படம் சிம்புவின் வானம் சமீபத்தில்
வெளிவந்த ஆள் திரைப்படம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி முன்னணி
நடிகர்கள் முதல் அட்ரெஸ் இல்லாத நடிகர்கள் வரை முஸ்லிம்களுக்கு எதிராக
திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

படிப்படியாக பிற
சமுதாயத்தினர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பகை மற்றும் பழி உணர்வுடன் பார்க்கவும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இந்தத்
திரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். இது பார்ப்பனர்களின், இந்துத்துவா சக்திகளின் சதியும்
சூழ்ச்சியும் ஆகும். இதன் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை
கேள்விக்குறியாக்கப்படும். எனவே இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வுடன் இருப்பதுடன்
சினிமா என்னும் வலுவான ஊடகத்தில் நாமும் நுழைய வேண்டும்.யாரும் எடுக்காத
முஸ்லிம்களின் தேசபக்தி முதல் அப்பாவி சிறைவாசிகள் வரை திரை வரலாற்றை எடுக்க நாம்
முன்வரவேண்டும்.இன்னும் கூடுமா?கூடாதா? என்று நினைத்துகொண்டு இருந்தால் பார்ப்பனர்களின் எண்ணங்கள் இந்த
ஊடகத்தில் வளர்ச்சி பெற்று முஸ்லிம் சமுகத்தை தனிமைப்படுத்திவிடுவார்கள்.
-Editor Alaudeen

Advertisement

Close