Dr.Pirai-ரத்தசோகையை போக்கும் திராட்சை!

dr.pirai_இருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதும், மூட்டுவலி, மலச்சிக்கலை சரி செய்யவல்லதும், இதயத்தை பலப்படுத்த கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான சிறந்த பழம் திராட்சை. தற்போது திராட்சை சீசன் தொடங்கியுள்ளது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை, சிவப்பு, கருப்பு நிறத்தில் திராட்சைகள் உள்ளன. அனைத்து வகை திராட்சையிலும் நன்மைகள் உள்ளன. திராட்சையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: உலர்ந்த திராட்சை, வெற்றிலை, லவங்கம், தேன். 15 உலர்ந்த திராட்சையை கழுவி வெந்நீரில் ஊறவைத்து எடுக்கவும். இதில் 2 லவங்கம் தட்டி போட்டவும். இதனுடன் வெற்றிலையை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர நெஞ்ச கோளாறுகள் சரியாகும். இருமலை கட்டுப்படுத்தும். காசநோய் வரமால் தடுக்கும். பசியை தூண்டும். சளி பிடித்து விடும் என்று திராட்சையை தவிர்த்து விடுகின்றனர். இது தவறு. சளி நுரையீரலை பாதிக்கிறது. அதிகநாள் நுரையீரலில் சளி தங்கியிருந்தால் காசநோய் வரும். திராட்சை சாப்பிட்டால் இது தடுக்கப்படும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட திராட்சை ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. திராட்சையை பயன்படுத்தி மூட்டு வலி, மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: உலர்ந்த திராட்சை, தனியா, பனங்கற்கண்டு. 15 உலர்ந்த திராட்சையில் ஒரு ஸ்பூன் தனியா சேர்க்கவும். நீர்விட்டு ஊற வைக்கவும். இதை அரைத்து எடுத்து சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திராட்சையில் உள்ள மருத்துவ வேதிப்பொருட்கள் சிறுநீரை பெருக்க கூடியது. திராட்சையை அடிக்கடி எடுத்துகொள்வதால் சிறுநீர் நன்றாக வெளியேறும். மூட்டுகளில் உப்புசத்து சேர்வதால் ஏற்படும் வீக்கம், வலியை போக்கும் மருந்தாகிறது. மூட்டுகளை பலப்படுத்தும். சிறுநீர் பாதையில் ஏற்படும் அழற்சி, சிறுநீரக கற்களை போக்கும் தன்மை கொண்டது.திராட்சையை பயன்படுத்தி ரத்த சோகையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். திராட்சை பழத்தை அரைத்து எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர இதயம் பலப்படும். ரத்த சோகை சரியாகும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். விதை உள்ள திராட்சையில் அதிக சத்துக்கள் உள்ளன. திராட்சையை விதைகளோடு சாப்பிடுவதால் முழுமையான பலன் கிடைக்கும்.

Close