பைக்கில் கடத்தி சென்ற 42 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

a7b4b090-21f8-415a-9b90-cbd9ada7ac0d_S_secvpfபட்டுக்கோட்டை அருகே நேற்று வாகன சோதனையின்போது, பைக்கில் கடத்திச் சென்ற 42 அரியவகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று தேர்தல் பறக்கும்படை அதிகாரி சாமிநாதன் குழுவினர் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் 3 பேர் வந்தனர். பைக்கை நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த தோல் பையை சோதனை செய்தபோது அதில் 42 அரியவகை நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து 3 பேரையும், நட்சத்திர ஆமைகளுடன் பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனச்சரக அலுவலர் ஜெயசங்கர் தலைமையில் வனக் காப்பாளர்கள் ராமச்சந்திரன், கணபதிசெல்வம், சுரேஷ்பாபு, வனக்காவலர்கள் சீரியல்ராஜ், சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சிக்கார்பாளையம் இளாஸ்புரம் மகன் மல்கூர் (45), கர்நாடக மாநிலம் சிப்லாபுரா மாவட்டம், சிந்தாமணி பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் மகன் மகேஷ் (22), மற்றொருவர் தஞ்சை மாவட்டம், மேலஉளூர் கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் (18) என்பது தெரியவந்தது. 

3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து அவர்களிடமிருந்து பைக், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் எதற்காக நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தனர்? எங்கு கொண்டு செல்கின்றனர்? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நட்சத்திர ஆமைகள் மருத்துவ குணம் கொண்டதால் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Close