சிறுவர்களுக்கான கூகுளின் பாதுகாப்பான இணையதளம்!

ஒரு காலத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் இருந்தது. இன்றைக்கு ஸ்மார்ட் போனும், இணைய தள வசதியும் முக்கிய அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்டது. ஆரம்பக் கல்வி பயிலும் போதே குழந்தைகள் இன்டர்நெட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். அவர்களின் கையில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போனும், கணினியும் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம், பிரிச்சு மேய்ந்து விடுவார்கள்.

image

புதிய இணைய தளம்
இன்டர்நெட் வழியாக கற்றுக் கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், குழந்தைகளின் மனதில் மோசமான தாக்கங்களை விதைக்கக் கூடிய கெடுதலான விஷயங்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு குழந்தை நல்ல விஷயங்களை தரக்கூடிய இணைய தளத்துக்கு சென்று அங்கே தனக்குத் தேவையானதை தேடிக் கொண்டிருக்கும் போது விளம்பர வடிவில் ஆபாசமான விஷயங்கள் அதே இணைய தளத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழந்தையால் அது என்னவென்று பார்க்காமல் போக முடியாது. இந்த விஷயங்கள் பெற்றோர்களை கவலைப்பட வைக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக கூகுள் குழந்தைகளுக்கென பிரத்யேகமான “கிடில் ” என்ற புதிய இணைய தளத்தை வடிவமைத்து வெளியிட்டியிருக்கிறது.
குழந்தைகளின் மனதை ஈர்க்கின்ற வகையில் விண்வெளியைப் போன்ற அழகான அனிமேஷனுடன் இந்த இணைய தளத்தின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த இணைய தளம் உருவாகியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி கூகுளில் நாம் தேடினால் முதலில் ஐன்ஸ்டீனைப் பற்றிய அபிசியல் பக்கமும், அடுத்ததாக அவரைப் பற்றிய விக்கிபீடியா பக்கமும் தான் வரும், ஆனால் கிடிலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி தேடினால் முதலில் ஐன்ஸ்டீனைப் பற்றிய குழந்தைகளுக்கான அறிவியல் தளங்கள் தான் வருகிறது. இதனால் குழந்தைகள் தாங்கள் தேடியதை சுலபமாக, அதே நேரத்தில் பாதுகாப்பாக பெற முடியும்.
முக்கிய கடமை
குழந்தைகளுக்கு பொருந்தக்கூடிய தளங்களை மட்டுமே கிடில் தேடிக் கொண்டு வரும். சம்பந்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுகின்ற வார்த்தை தவறானது. மீண்டும் முயற்சிக்கவும்’ என்ற தகவல் தோன்றி உங்களை எச்சரிக்கை செய்யும்…
கிடிலில் தேடப்படும் பதிவுகள் 24 மணி நேரத்துக்கு ஒரு முறை அழிக்கப்பட்டு விடும் என்கிறது கூகுள். இந்த இணைய தளத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமையாகும். இனி குழந்தைகள் கிடிலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பயன் பெறலாம்.

https://www.kiddle.co/

Close