Adirai pirai
history

அஸ்ஃபாக்குல்லா கான் – எத்தனை பேருக்கு தெரியும்!

Ashfaqulla-Khan

asfaq newபகத்சிங்கின் நினைவு நாளை நேற்று நாடு கொண்டாடியது. நாமும் வரவேற்போம். அதே கால கட்டத்தில் இந்த நாட்டு விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்த மற்றொரு தியாகியான அஸ்ஃபாக்கைப் பற்றி நமது வரலாறு சொன்னதா? அவர் இஸ்லாமியர் என்பதால் அவரின் தியாகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இந்த பதிவில் அவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

உத்தரபிரதேசம் சஹாஜான்பூரில் ஹிஸ்புல்லா கானுக்கு மகனாக 1900 அக்டோபர் 2 ந்தேதி பிறந்தவர் அஸ்ஃபாக். எல்லேரையும் போல துடிப்புள்ள இளைஞனாக வளர்ந்தார். நாட்டில் சுதந்திர வேட்கை பற்றி எரிந்து கொண்டிருந்த நேரம். மஹாத்மா காந்தி விடுத்த சுதந்திர அழைப்பை ஏற்று அஸ்ஃபாக்கும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரது ஊரில் இருந்த ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ராம் பிரசாத்தோடு சேர்ந்து சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். 

வாரணாசியில் ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியேசன்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சசீந்தரநாத் சன்யால் இதனை தோற்று வித்தார். 1925 ஆம் ஆண்டு பல இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர்ந்தனர். விடுதலையை தூண்டும் பல துண்டு பிரசுரங்கள் இங்கிருந்து வெளியிடப்பட்டன. சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இவர்களுக்கு பெருமளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. பொருளாதாரம் இவர்களிடத்தில் இல்லை. எனவெ ஆங்கிலேயரின் அரசு கஜானாக்களை கொள்ளையிட தீர்மானித்தனர். 

ஆங்கிலேயரின் பெரும் பணக் கட்டுக்கள் ரயிலில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு செல்வது வழக்கம். இந்த ரயிலில் வரும் பணத்தை கொள்ளையிட சசீந்திர நாத் திட்டமிட்டார். இந்த வேலையை திட்டமிட்டு செய்து முடிக்க அஸ்ஃபாக்கை நியமித்தார். அந்த ஆபரேஷனுக்கு அஸ்ஃபாக் தலைமையேற்றார். 

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ந்தேதி சஹாஜஹான்பூரிலிருந்து லக்னோவுக்கு பெரும் பணக்கட்டுக்களை சுமந்து கொண்டு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் அஸ்ஃபாக், சுசீந்தர் பக்ஷி, ராஜேந்திர லஹ்ரி என்ற இந்த மூவரும் இரண்டாம் வகுப்பில் பயணித்தனர். ககோரி என்ற இடத்தில் ரயிலின் சங்கிலி அஸ்ஃபாக்கால் இழுக்கப்பட்டது. பணப்பெட்டி உள்ள இடத்துக்கு அஸ்ஃபாக் முன்னேறி சென்றார். அங்குள்ள காவலர்களிடம் போரிட்டு பணக் கட்டுகளை ரயிலிருந்து கீழே தள்ளினார். பத்துக்கு மேற்பட்ட போராளிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து பணக்கட்டுகளோடு அனைவரும் வெற்றிகரமாக திரும்பிச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் ஆங்கிலேயரை மிகவும் கோபப்படுத்தியது. அந்த இடத்தை சுற்றி தேடுதல் வேட்டையில் இறங்கியது பிரிட்டிஷ் ராணுவம். 1925 ஆம் ஆண்டு 26 ந்தேதி பிரிட்டிஷ் ராணுவம் ராம்பிரசாத் பிஸ்மிலை கைது செய்தது. அஸ்ஃபாக் வீட்டிலிருந்து ராணுவத்தில் கையில் சிக்காமல் தந்திரமாக தப்பித்து சென்று விட்டார். அங்கிருந்த கரும்புக் காட்டுக்குள் சில காலம் பதுங்கியிருந்தார். சில காலம் சென்று காசிக்கு போய் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பதுங்கிக் கொள்கிறார். அவரது நண்பர்கள் உதவியால் பீஹார் சென்று ஒரு அலுவலக வேலையில் அமர்ந்து கொள்கிறார். சில காலம் செல்கிறது. மீண்டும் நாட்டு விடுதலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெல்லியை நோக்கி பயணிக்கிறார். அங்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார். இதனால் கடுப்படைந்த ஆங்கிலேயர்கள் அஸ்ஃபாக்கின் தலைக்கு மிக அதிக விலையை நிர்ணயித்தனர். பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் அஸ்ஃபாக்கை காட்டிக் கொடுக்கின்றனர். அஸ்ஃபாக் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

போலீஸ் காவலில் உள்ள அஸ்ஃபாக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வெள்ளையர்கள் ஒரு முஸ்லிம் காவல் துறை அதிகாரியை அனுப்புகின்றனர். அவர் அஸ்ஃபாக்கிடம் பேசினார்.

‘இதோ பார் அஸ்ஃபாக்! நானும் ஒரு முஸ்லிம்தான். உன்னுடைய கைது கண்டு வருந்துகிறேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொண்டால் உனது விடுதலைக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு இந்து. பிரிட்டிஷார் ஆட்சியில் நாம் சுகமாக இருக்கலாம். இவர்களை விரட்டி விட்டு இந்துக்கள் ஆட்சியில் அமர்ந்தால் இஸ்லாமியர் வாழ்வதே சிரமமாகி விடும். இஸ்லாமிய நடவடிக்கைகள் பலதுக்கும் தடை விதிப்பார்கள். நாம் நிம்மதியாக வாழ முடியாது. எனவே அவர்களிடமிருந்து பிரிந்து எங்களோடு சேர்ந்து கொள். உனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.’ என்றார்.

‘நான் உன்னை எச்சரிக்கிறேன். பிறந்த நாட்டுக்கு துரோகமிழைக்கும் இது போன்ற பேச்சுக்களை பேசிக் கொண்டு இனியும் என்னிடம் வர வேண்டாம். ராம் பிரசாத் இந்துவாக இருந்தாலும் எனது சகோதரன். இந்த நாட்டு குடிமகன். அந்நியனான பிரிட்டிஷாரின் தயவில் வாழ்வதை விட மண்ணின் மைந்தனான ஒரு இந்துவின் ஆட்சியில் மரணிப்பதையே பெருமையாக கருதுகிறேன்.’ என்று காட்டமாக பதிலளித்தார் அஸ்ஃபாக்.

ககோரி ரயில் கொள்ளை சம்பந்தமாக ஜவஹர்லால் நேரு, ஆச்சார்ய நரேந்திர தேவ், கோவிந்த் பல்லக் போன்றவர்கள் குற்றவாளிகளை விடுவிக்க எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி விடலாம் என்று நம்பியிருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்ஃபாக், ராஜேந்திர லஹ்ரி என்ற இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்த மூவரின் தூக்கு தண்டனை தீர்ப்புக்கு நாடு முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. 1927 ஆம் ஆண்டு 19 ந்தேதி அஸ்ஃபாக் ஃபைஸாபாத்தில் தூக்கிலிட அழைத்து வரப்பட்டார். ‘நான் எனது தாய் நாட்டு விடுதலைக்காக வாழ்ந்தேன். எதிரியைக் கூட நான் கொன்றதில்லை. நான் நிரபராதி. எனது உண்மை நிலையை இறைவன் அறிவான்’ என்று சொல்லி விட்டு தொழுது கொள்ள அனுமதி கேட்டார். அனுமதி அளிக்கப்பட்டது. தொழுது முடித்தவுடன் அஸ்ஃபாக்கை தூக்கில் ஏற்றி கொன்றனர் வெள்ளையர்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் – இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்.