தீபாவளிக்கு ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணயம் !

தீபாவளிக்கு வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி  பஸ்களுக்கான கட்டணத்தை சங்கத்தினர் நிர்ணயித்துள்ளனர்.  இதுகுறித்து சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் அன்பழகன் நேற்று  கூறியதாவது: ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் கொண்டு வந்து  நிறுத்தி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் என்ற  கெட்ட பெயர் உருவாகியுள்ளது. எங்கள் சங்க உறுப்பினர்களாக 200 பஸ்  உரிமையாளர்கள் உள்ளனர். தினமும் 350 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளோம். 
அதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண பேருந்து ரூ.580,  குளிர்சாதன பேருந்து ரூ.680,  கும்பகோணம் ரூ.500, ரூ.600, தஞ்சாவூர்  ரூ.550, ரூ.650, மதுரை ரூ.730, ரூ.880, கோவை ரூ.800, ரூ.975, சேலம்  ரூ.600, ரூ.700, காரைக்குடி ரூ.700, ரூ.850, திருநெல்வேலி ரூ.850,  ரூ.1150, நாகர்கோயில் ரூ.950, ரூ.1250.  இவ்வாறு அவர்கள் கூறினர். 

ஆனால் ஒரு சில தனியார் ஆம்னி பஸ் நிறுவன இணைய தளங்களில் பல மடங்கு கட்டண உயர்வுடன் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்ததை விட இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக முன் பதிவு செய்த பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறும்போது, சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண ஆம்னி பஸ்சில் கடந்த வாரம் செல்லும் போது ரூ.850 கட்டணம் வசூலித்தனர். ஆனால் தற்போது இணைய தளத்தில் ரூ.1000 என்றும் மற்றொரு நிறுவன இணைய தளத்தில் ரூ.1199 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆம்னி பஸ் கட்டணம் அவரவர் இஷ்டத்துக்கு முடிவு செய்யப்படுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும். ஆன்லைனில் பகிரங்கமாக கட்டண கொள்ளை பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை போக்குவரத்து துறை இதுவரை கண்டு கொள்ளவில்லை.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இந்த தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்துவது யார்? இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பகுதியில் புரோக்கர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆபரேட்டர்களின் உரிமத்தை வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ரத்து செய்ய வேண்டும்.
பெர்மிட் இல்லாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த புகார் தெரிவிக்க உதவி மையம் தனியாக தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Advertisement

Close