ஆதார் சட்டம் அமலுக்கு வந்தது: அரசிதழில் வெளியீடு!

download (1)ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஆதார் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக ஆதார் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 16ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசிதழில் மத்திய அரசு கடந்த 26ஆம் தேதி ஆதார் சட்டத்தை வெளியிட்டது.

ஆதார் அட்டையை இதுவரை பெறாதவர்கள், அரசிடம் இருந்து மானியத்தைப் பெறுவதற்கு மாற்று வழியைத் தெரிவிக்கலாம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் அட்டையை குடியுரிமை அட்டையாகவோ அல்லது தாற்காலிக உறைவிடச் சான்றாகவோ பயன்படுத்த முடியாது. ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பொது மக்களுக்கு நிதியுதவிகளை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய, மாநில அரசுகள் செலுத்த முடியும்.ஆதார் சட்ட விதிகளை மீறுவோருக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கவும் சட்டத்தில் விதிகள் உள்ளன.நாடு முழுவதும் இதுவரை ஆதார் அட்டைகளை 99.64 கோடி பேர் பெற்றுள்ளனர்.

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு மானியத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதனால் ரூ.15,000 கோடியை மத்திய அரசு மிச்சப்படுத்தியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் தெரிவித்திருந்தார்.இதேபோல், 4 மாநிலங்களில் ஆதார் மூலம் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த மாநிலங்களுக்கு ரூ.2,300 கோடி மிச்சப்பட்டிருக்கிறது.

Close