Adirai pirai
posts

அதிரையில் உருது பள்ளிக்கூடம் !

ஆம், இது பலருக்குப் புதினமாகத் தோன்றலாம். இது அதிரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.  நாங்கள் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துவந்த காலத்தில், “இந்தி ஒழிக!  இந்தி ஒழிக!” என்று தமிழ்நாடு முழுவதிலும் மக்களாலும் மாணவர்களாலும் கூக்குரல் ஒலிக்கப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூத்தோர் இந்தி படிப்பதன் கட்டாயம், வேலை வாய்ப்புகள் பற்றியெல்லாம் ஆர்வமூட்டவே, பள்ளி மாணவர்கள் அந்த மொழியைக் கேவலப்படுத்திக் குரலெழுப்பியபோதும், என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும் அந்த மொழியின் மீது காதல் கொண்டோம்.

அத்துடன் நிற்கவில்லை.  அதில் ‘ட்யூஷன்’ படிப்பதிலும் ஆர்வம் கொண்டு, இந்தி வாத்தியார் (பிராமணர்) கீழத்தெரு வீட்டுக்குப் போய் ‘ட்யூஷன்’ படித்தோம்.  இது, ஹிந்தி மொழியைக் கற்ற அனுபவம்.  அந்த நேரத்தில் என்னிடமிருந்த மொழி ஆர்வத்தில், குர்ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பை பம்பாயிலிருந்து தருவித்துப் படிக்கத் தொடங்கினேன்.  அந்த நூல் இன்றுவரை எனது நூலகத்தில் உள்ளது!

தலைப்பில் காணும் ‘உர்து’ப் பள்ளிக்கூடம் எந்தச் சூழலில் தொடங்கப்பட்டு நடந்து வந்தது?  நாங்கள் சின்ன்ன்ன்னப் பருவத்தில் இருந்தபோது நடந்த நிகழ்வு அது.   

நடுத்தெரு மரைக்கா பள்ளிக்குச் செல்லும் வீதியில், இப்போது மேலத்தெரு ஜமாலாக்கா வைத்திருக்கும் ரொட்டிக் கடைக்கு நேராக உள்ள இப்போதையப் புது வீடுதான் உர்துப் பள்ளிக்கூடத்தின் அமைவிடம்.  அது மூன்று நீளமான அறைகளைக் கொண்ட ‘கிட்டங்கி’.  ஒவ்வொரு பருவத்திலும் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைக்க உதவும் Godown.  அதன் வராந்தாவில்தான் உர்துப் பள்ளி நடந்துவந்தது.  அப்பள்ளி நிறுத்தப்பட்ட பின்னரும், பல்லாண்டுகளாக அப்பள்ளியின் கரும்பலகை சுவரில் இருந்ததை நான் கண்டுள்ளேன்.

நாகூரிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்று சொல்லப்பட்ட – ‘ஹஸன் தாரா மொவ்லானா’ என்று அறியப்பட்ட – அந்தக் காலத்து ‘சேலாசக் கைலி’  உடுத்திய – நெடிய உருவம்தான் பள்ளியின் உஸ்தாது.  எங்கள் காக்காமார், மாமாமார் எல்லாரும் அந்தப் பள்ளியில் பாடம் படித்தவர்கள்தாம்.  மொழி என்ற வகையில் உர்துவும் ஹிந்தியும் (லிபி)யைத் தவிர வேறுபாடற்ற மொழிகள்தானே?  என்னைவிட வயதில் மூத்தவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் உர்து படித்த அனுபவத்தால் தான், பிற்காலத்தில் பம்பாய்க்குப் போய் ‘சக்கைப் போடு’ போட்டுச் சம்பாதித்தார்கள்.

இந்தப் பள்ளிக்கூடம்தான் அவர்களை உர்து மொழியை எழுதப் படிக்கத் தகுதியானவர்களாக உருவாக்கிற்று.  பெண் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதியிருக்கவில்லை! பாவம்!

எங்கிருந்தோ வந்தவர்!  நமதூரில் வந்து வாழத் தொடங்கிய பின்னர், தமது மொழியான உர்துவைப் பொது மக்களுக்குப் படித்துக் கொடுக்கும் ஆசிரியப் பணியைத் தொடங்கி, மொழிச் சேவையும் மார்க்கச் சேவையும் செய்த ஹசன்தாரா மவ்லானா இந்த மண்ணிலேயே மறைந்தார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உயிரோடிருக்கும் பாக்கியம் பெற்ற அதிரைவாசிகள் தமக்குக் கிடைத்த கல்விச் செல்வத்தை, உர்து மொழியைப் பேசவும் எழுதவும் திறமை பெற்றுள்ளதை, அதற்கு உதவியாருந்த தம் ஆசானை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்கள்.

இப்படி, பிறமொழி பேசிய ஆசிரியப் பெருந்தகைகள் இன்னும் பலர் இந்த மண்ணில் சேவையாற்றியுள்ளனர்.  சுல்தான் வாத்தியார், தலைப்பாகை கட்டிய ஒன்றைக்காசு வாத்தியார், உர்து வாத்தியார் (செய்யது அஹ்மது) முதலானோர் இந்த மண்ணில் கல்விச் சேவை புரிந்துள்ளனர்.  நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லவே, அந்த மொழி நம் மீது திணிக்கப்படாதவரை. 

இக்காலத்தில் இளம் மவ்லவிகள் வெளியூர் மதரசாக்களில் சென்று பயின்றும் உர்து மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.  ஆனால் அந்த மொழியறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அந்த மொழியை மறந்துவிடுகின்றனர்.  

இத்தாலிப் பழமொழியொன்று இவ்வாறு கூறுகின்றது:

“இரண்டு மொழிகளைக் கற்றவன் இரண்டு மனிதர்களுக்குச் சமமானவன் ஆவான்.” இது எத்துணை உண்மையானது என்பதை வெளிநாடுவாழ் மக்கள் உணர்வார்கள் அன்றோ? 

அதிரை அஹ்மது

நன்றி: அதிரை நிருபர்

Advertisement