சுங்கச் சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் !

31-1459435843-karunanidhi81-600சுங்கச் சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (31.3.2016) நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் நுழைவுக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சரக்கு வாகன வாடகை உயர்வதோடு, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. அதில் 26 சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்தும், 18 சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, வேலூர், நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் 12 சதவீத கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி கடந்த அக்டோபரில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, படிப்படியாக சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது லாரி உரிமையாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்கச் சாவடிகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் சாலை பராமரிப்பு பணிகளை எதையும் செய்யாமல் அதன் பயனை அனுபவித்து வருகின்றனர். நடுத்தர மக்கள், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது வேண்டாத வேலையாகும். எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Close