படிப்பு ஒரு தடையில்லை: திறமையே பலம் !

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹல்தார் நாக். இவரிடம் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

image

இவர் மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால் இவர் எழுதிய கவிதைகளையும் காவிய தொகுப்புகளையும் சாம்பல்பூர் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் வைத்துள்ளது. கொஸ்லி மொழியில் இவர் எழுதிய கவிதைகள், கதைகள் அனைத்தையும் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக சொல்கிறார். தலைப்பை சொல்லிவிட்டால் போதும். கடகடவென தன் கவிதைகளை கொட்டுகிறார்.
இவரது எழுத்துக்களை ‘ஹல்தார் கிராந்தபதி – 2 ‘ என்கிற தொகுப்பாய் சாம்பல்பூர் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. படிப்பறிவில்லாத இவரது கவிதைகளில் ஆராய்ச்சி செய்து, ஐந்து மாணவர்கள் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது சாதனையை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்து பேசும் ஹல்தார் நாக், “இளைஞர்கள் இலக்கியத்தில் ஆர்வமுடன் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அனைவருமே கவிஞர்கள்தான். சிலரால் மட்டுமே அந்த கவிதைக்கு உருவம் கொடுக்க முடிகிறது” என்கிறார்.
இவர் 10 வயதிலேயே தன தந்தையை இழந்து, பின்னர் 16 ஆண்டுகள் பள்ளியிலேயே சமையல் வேலை பார்த்துள்ளார். பின்னர் 1000 ரூபாய் கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போதுதான் தனது முதல் கவிதை தொகுப்பான “தோடோ பார்க்கச்”சை வெளியிட்டாராம்.
“கவிதை என்பது ஏதேனும் ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து புரிய வைக்க வேண்டும்” என்கிறார் இந்த 66 வயது சூப்பர் மேன்!


ஆசிரியர் கருத்து:
திறமை இருந்தால் போதும் படிப்பு ஒரு தடையில்லை என்பதனை இவர் நிருபித்து இருக்கிறார். இவரை போல எத்தனையோ அறிவு ஜிவிகள் திறமையை வெளியில் கொண்டு வராமல் இருக்கின்றனர். அவர்களின் திறமைகளை அவர்களால் மட்டுமே நிரூபிக்க இயலும் என்பதனை உணர்த்தால் இது சாத்தியமாகும்.

Close