ஓய்வு பெற்றார் மாணவர்களின் நாயகன் RAIN ரமணன்!

 ‘அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில்… ‘  என்று தொடங்கும்  பரிச்சயமான குரலுக்குரியவர் ரமணன். அரசு ஊழியர்களில்,  தமிழக குழந்தைகளை ரமணன் அளவுக்கு அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர் யாராவது இருப்பார்களா என்றால் இல்லை.

மார்ச்-31 உடன் தனது வானிலை முன்னறிவிப்பு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ரமணன், தன்னுடைய அடுத்த இன்னிங்சை  ‘மாணவர்களுக்காக ‘ கொண்டு செல்லவிருக்கிறார்  என்ற தகவல் ஏராளமான பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெயில் ஓய்ந்து நிழலின் குளிர்ச்சி  நம்மை தீண்டத்துவங்கிய ஒரு மாலை வேளையில் அவரை  சந்தித்தோம். ஓய்வுக்குப்பின்னரான தனது எதிர்கால திட்டம், அரசுப்பணி அனுபவம் ஆகியவற்றை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.


உங்களுடைய முதல் பணியிட அனுபவம் நினைவில் இருக்கிறதா ?

கண்டிப்பாக… ஆந்திராவின் கர்நூலில்தான் முதல் போஸ்டிங். அப்போதிருந்த பணி குறித்து சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. அங்கு எனக்கான பணி என்பது  ‘அப்சர்வர் ‘ மட்டுமே. அது முதல் நிலை, அவ்வளவுதான். சென்னையில்தான் முன்னறிவிப்பாளராக இருந்தேன். என்னுடைய  36 ஆண்டுகள் சர்வீசில் யார் மனமும் புண்படாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதில் திருப்தி.

பள்ளி, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்லுங்களேன்?

என்னுடைய தந்தையாருக்கு ராமநாதபுரம்தான் பூர்வீகம். நான் முழுமையான சென்னைவாசி. இங்கேதான் விவேகானந்தா, குருநானக்  ஆகிய கல்லூரிகளில் படித்தேன். பின்னர் அண்ணாமலைப் பல்கலையில் படித்தேன், இங்கேதான், நீண்டகாலம் பணி செய்தேன்.அடுத்த கட்டப் பயணம் மாணவர்களுக்காக என்று சொல்லியிருக்கிறீர்கள்.  கலாம் பாதையில் ரமணன் என்று உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக மீம்ஸே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள், சொல்லலாமே ?

என்னை கலாமாகவே ஆக்கிட்டாங்களா, (இடிபோல சிரிக்கிறார்)…  வானிலை அறிக்கைக்கு முன் அதில் உள்ள நுணுக்கங்கள், எப்படி கணிக்கப்படுகிறது போன்றவைகளை மாணவர்களுக்கு  போதித்தால்,  அது எதிர்காலத்தில் அதிகளவு பயன்படும் என்பதால் மாணவர்களுக்காக  என் பயணம் என்று சொல்லியிருந்தேன்.

செய்தி வாசிப்பின்போது மறக்க முடியாதது இது என்று நினைவில்  அலையடிக்கும் செய்தி என்ன ?

கண்டிப்பாக ‘ தானே ‘வைத்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் அப்டேட்டுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தை  ‘தானே’  புயல்தான் உருவாக்கி வைத்தது. அந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் எங்களுடைய அடுத்த கட்டச் செய்திகளை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ‘தானே’  புயலால் எங்கெங்கு முழுமையான பாதிப்பு,  மீட்புக் குழுவினர் எந்தப் பகுதிக்கு முதலில்  விரைந்து செல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், சமூக ஆர்வலர்களும் செய்யக் கூடிய உதவிகள் என்ன? இப்படி பல விஷயங்களை  விடாமல் கொடுத்துக் கொண்டே இருந்தோம்.

பரபரப்பான நேரங்களிலும் பேட்டிக்காக ஊடகத்தினர் வந்து கொண்டே இருந்தாலும் உங்களிடம் சலிப்பான ஒரு தன்மையை பார்க்க முடியாது… இது எப்படி சாத்தியப்பட்டது? இப்படி ஒரு இயல்பை வலிந்து நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களா ?

அந்த மனநிலை  எனக்கு இயல்பாகவே அமைந்து விட்ட ஒன்று. மேலும், சிறுவயதிலிருந்தே எடுத்துக்கொண்ட வேலையை ஆர்வமாக செய்ய நினைப்பேன். ஐந்தில் வளையாத ஒன்றை இப்போது வளைக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

மழை உண்டு, மேகம் உண்டு என்று போய்க் கொண்டிருந்த உங்களையும், அரசியல் வம்பில்  ஒரு அரசியல் கட்சி இழுத்து விட்டதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள் ?

போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்…. இப்படித்தான்

சிறுவர்கள்,   குறிப்பாய் மாணவர்கள் உங்களை ‘மழை அங்கிள்’ என்று வர்ணித்து கொண்டாடியதை ரசிக்கிறீர்களா?

நீங்களும் அதை ரசிக்கிறீர்கள்தானே ? (பலமாகவே சிரிக்கிறார்). பொதுவாகவே எனக்கு மக்கள் பெரியளவில் ஆறுதலாக இருந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  என்னைப் பற்றி நெகடிவ் கமென்ட்  வந்தது கிடையாது. அப்படி வருகிறது என்றால், அது மக்களிடம் இருந்துதானே வந்திருக்க வேண்டும்… வரவில்லையே… அந்த வகையில்  எனக்கு மக்கள் ஆறுதல் நிறையவே இருந்திருக்கிறது.

செய்திகளில் நீங்கள் கடைப்பிடித்த மிக முக்கியமான அம்சம் அல்லது உறுதியான ஒன்று என எதைச் சொல்வீர்கள்?

செய்தியின் மூலம் மக்களை பயமுறுத்தக் கூடாது என்பது!

 

உங்கள் குரலுக்கு தமிழ்நாட்டைக் கடந்தும் ரசிகர்கள் உண்டு.  அரசுப் பணியின் கடைசி நாளன்று    காலை முதல் பிரிவுபசார நிகழ்வாகவே போய் இருக்கும். அன்று வாசித்த செய்தியாக ஒரு செய்தியை வாசியுங்களேன்,  வாசகர்களுக்காக…

வேண்டாம் சார்… அப்புறம் நான் நடிகராகி விடுவேன். என்னுடைய அரசுப்பணியை அர்ப்பணிப்புடன் செய்த ஒரு கடமை இது. அவ்வளவே. பொதுவாக  வெளியில் தெரியும், சரீர சம்பந்தமான  விஷயங்களில் நான் ரொம்ப தூரம் உள்ளே போவதில்லை.

மீண்டும் அதே இடத்துக்கே வருகிறேன். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காதவர் என்ற இமேஜூம் உங்களுக்கு பொது வட்டாரத்தில் இருக்கிறது… இதற்கென்று தனி பயிற்சி ஏதேனும் செய்கிறீர்களா ?

பயிற்சிகளும் உண்டு… ஆனால், அது மட்டுமே போதாது. மனமும் நம் வசத்தில் வரவேண்டும். எல்லாமே விதிக்கப்பட்டதுதான் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ‘எதைக் கொண்டு வந்தோம், கொண்டுபோக…’ என்ற கேள்வியை உள்ளுக்குள் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
‘இருக்கிற காலம் வரையில் மகிழ்ச்சியாகவே இருப்போம், இருக்க வைப்போம்’ என்று  மனதில் உறுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.  அப்போதே, இடைப்பட்ட  இந்த கொஞ்ச காலத்தில் ஏன் கோப தாபங்கள் என்ற கேள்வி தானாகவே வந்து விடும். என்னைப் பொறுத்தவரையில்  யாரையும் வித்தியாசம் பார்க்காமல் ஒரே மாதிரி அணுகுங்கள். கோப, தாபம், ஏற்றத் தாழ்வு இப்படி எதுவுமே இல்லாமல் போய்விடும்.

Close