Adirai pirai
posts

இனிக்கும் இல்லறம் – 1


இல்லறத்தில் இனிமையை இழக்காமலிருக்க
வழக்கம் போலவே அன்றும் லேட்டாகவே வீட்டிற்கு வந்தான் ஜமால். கேட்டை திறந்த அவனது மனைவி ஷமீமாவின் முகத்தில் கோபத்தை கண்ட பொழுதுதான் ஜமாலுக்கு புரிந்தது, இன்றும் நாம் வாக்கு தவறிவிட்டோமே என்று.
ஜமாலின் முகத்தை கூட ஷமீமா பார்க்கவில்லை. அவன் மீது அவளுக்கு அவ்வளவு கோபம்! துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தனது அக்கா மற்றும் குழந்தைகளை காண செல்லவேண்டும் என கடந்த 2 வாரமாக ஜமாலிடம் கோரிக்கை வைக்கிறாள். ம்ஹும்! நடந்தபாடில்லை! ஜமாலிற்கு ஒரு நாள் கூட அலுவலகத்திலிருந்து வேலையை முடித்துவிட்டு முன்னரே வீட்டிற்குவர இயலவில்லை. வார விடுமுறையிலோ என்ன வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனது உம்மாவை காணச் சென்றுவிடுவான். திரும்பி வரும்போது இரவு ஆகிவிடும். சுருக்கமாக கூறினால் ஷமீமாவிற்கு தனது உறவினர் வீடுகளுக்கும், எங்கேனும் சுற்றுலா செல்வதற்குமான ஆசையெல்லாம் நிராசையாகிவிட்டது எனலாம்!
இப்பொழுது அவளுடைய பொறுமை எல்லையை மீறிவிட்டது!
“மனைவியிடம் பாசமுள்ள கணவனாக இருந்தால் எப்படியாவது நேரத்தை கண்டுபிடிக்கலாம். நீங்கள் நடிக்கிறீர்கள்!உங்களுக்கு என்னிடம் கடுகளவு பாசமும் கிடையாது!” -தனது கவலையை அடக்கமுடியாமல் குமுறினாள் ஷமீமா.
-இந்த கதை இவ்விடம் நிற்கட்டும்.
நாம் இவர்களில் யார் மீது குற்றம் சுமத்துவோம்?
இருவரும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றனர். இரு துருவங்களாகவே தங்களது வீட்டில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
சற்று குரலை உயர்த்தினாலே போதும் விவகாரத்திற்கு ஊர் ஜமாஅத்தையோ, நீதிமன்றத்தையோ அணுகும் இக்காலக்கட்டத்தில் இவர்களின் திருமண வாழ்வும் விவகாரத்தில்தான் முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
கம்யூனிகேசன் கேப்
“நான் ஏன் அலுவலகத்திலிருந்து லேட்டாக வருகிறேன்?” என்பதை ஜமால், ஷமீமாவிடம் விளக்கியிருந்தால் பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். இல்லற வாழ்க்கையின் ஓட்டத்தில் பலருக்கும் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் கம்யூனிகேசன் கேப் ஆகும். அது என்ன கம்யூனிகேசன் கேப்?
பிரச்சனையை புரிந்துகொள்வதில் தம்பதிகள் இருவருக்கிடையே நிலவும் இடைவெளியாகும். தனது அக்காவையும், குழந்தைகளையும் காணச்செல்ல விரும்பிய ஷமீமாவின் ஆசையை ஜமால் புரிந்திருக்க வேண்டும். இத்தகைய காரியங்களை அலட்சியமாகவோ, தமாஷாகவோ கருதும் வேளையில்தான் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகிறது.
குடும்ப நீதிமன்றங்களிலோ, ஊர் ஜமாஅத்துகளிலோ தீர்வு காணவரும் ஆயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகளை கவனித்தால், அவற்றில் 90 சதவீதமும் இத்தகைய தகவல்தொடர்பு இடைவெளி அதாவது பிரச்சனையை தம்பதிகள் இருவரும் புரிந்துகொள்வதில் ஏற்படும் இடைவெளியால் உருவானவையாக இருக்கும்.
ஆனால், பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்க்கையை பங்கு வைப்பவர்களுக்கு இல்லற வாழ்க்கை என்பது பூலோக சுவர்க்கமாக மாறும். இத்தகையதொரு அழகானதொரு வாழ்க்கையை வாழ நீங்கள் செய்யவேண்டியது என்ன?

குறிப்பு: இன்றைய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி தொடர்கள் குடும்பத்துக்குள் சண்டை சச்சரவுகளையும் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் ஏற்ப்படுத்தி பெண்களின் மனதை வீனாக்கி  பல விவாகரத்துகளுக்கு காரணமாக ஆகிவிடுகின்றனர். இதற்க்கு மத்தியில் கணவன் மனைவிக்கு இடையில் நல்ல புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்தொடர் பதிவு வாரம் ஒரு முறை பதியப்படும். இதற்க்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…
Advertisement