Adirai pirai
தமிழகம்

மக்கள் நலக்கூட்டணியில் இணைகின்றதா SDPI???

வைகோவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியில் இப்பொழுது மேலும் ஒரு கட்சி இணைகிறது.

தமிழக தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மூன்றாம் அணியாக மக்கள் நல கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் இது பல அரசியல் கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டாலும் விஜயகாந்தின் தேமுதிக கட்சி மக்கள் நல கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டதால் மக்கள் நல கூட்டணித் தலைவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது திமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது மக்கள் நல கூட்டணிக்கு பலம் சேர்க்கும் விதமாகவே கருத்தப்பட்டது.

அதன் பின்னர் ஜி.கே. வாசனின் தமாகா கட்சியும் மக்கள் நல கூட்டணி மற்றும் தேமுதிகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்து அந்த அணியில் இருந்த அனைத்து கட்சிகளுக்கும் கடந்த வார இறுதியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு ஏற்படாததால் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற எஸ்டிபிஐ கட்சியும் மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமாகா வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி இன்று மாலை மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன் சேர்ந்து விஜயகாந்தையும் சந்திக்க உள்ளார். எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.