தமிழ்நாடு பிரிமியர் லீக் அறிமுகம்!

ஐபிஎல் ஏமாற்றத்தை ஈடுகட்ட, தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்கிற டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
கடந்த 8 சீசன்களிலும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் போட்டியின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றுக்கு ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
அந்த அணிகளுக்குப் பதிலாக ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய இரு புதிய அணிகள் களமிறங்கியுள்ளன. கடந்த 8 சீசன்களிலும் சென்னை அணிக்காக விளையாடிய தோனியும், ரெய்னாவும் இந்த முறை எதிரெதிர் அணிகளில் இடம்பெற்றுள்ளனர். தோனி புணே அணிக்கும், ரெய்னா குஜராத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எந்தவொரு ஆட்டமும் ஒதுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
சிஎஸ்கே ரசிகர்களின் இக்குறையைப் போக்க தமிழ்நாடு அளவிலான டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று ஐபிஎல் பாணியில் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போட்டி குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்தப் போட்டி தொடங்கும். 8 அணிகள் பங்கேற்க உள்ளன. சென்னை மற்றும் திண்டுகல்லில் போட்டிகளில் நடைபெறுகின்றன. தமிழ்நாடு லீக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு மற்றும் இதர மாநில வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.

Source :தினமணி

Close