ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 41-ஆக உயர்வு!

2ஜப்பானில் இரு நாள்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது.
இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானின் தென்மேற்கில் உள்ள கியூஷூ தீவில் குமமோடோ நகருக்கு கிழக்கே வியாழக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் குமமோடோ நகரிலிருந்து பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தன.இதில் 9 பேர் உயிரிழந்தனர்.அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகள் பதிவான நில அதிர்வு உள்பட, ஏராளமான பின்னதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், அதே பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7 அலகுகளாகப் பதிவானது.வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருந்ததால் இந்த முறை புதிய கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து குமமோடோ மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தனவர்களின் எண்ணிக்கை 35 ஆகியுள்ளது. 1,000 பேர் காயமடைந்தனர். அவர்களில் 184 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:நிலநடுக்கத்தின் பேரதிர்வு காரணமாக மலைப்பகுதிகளில் மணல் சரிவு ஏற்பட்டு, வீடுகள், சாலைகள், ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு பல்கலைக்கழகக் கட்டடம் உள்பட, அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வீடுகள் ஆகியவை தரைமட்டமாகின.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்களைக் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அமைச்சரவை தலைமைச் செயலர் யோஷிஹிடே சுகா கூறியதாவது:நிலநடுக்கம் ஏற்பட்ட ஏராளமான பகுதிகளில், பலர் இடிபாடுகளிடையே புதையுண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அவர்களை உயிருடன் மீட்க போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் ஆகியோர் போராடி வருகின்றனர் என்றார் அவர். நிலநடுக்கம் காரணமாக உடையும் நிலையிலுள்ள அணை உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில் இருந்து 90,000 பேர் பத்திரமான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே புயல் சின்னம் உருவாகியிருப்பதாகவும், அது அந்தப் பகுதிகளைத் தாக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜப்பானின் பிற பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், அதிக அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களைக் கண்டறியாத கியூஷூ தீவில் தற்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Close