Adirai pirai
posts

ஆஹா..! இவரல்லவா முன்மாதிரி தலைவர் ! (அஹ்மத் ரிஸ்வான் அவர்களின் சிறப்பு கட்டுரை)

‘தலைவர்கள்’ என்றதும் நம் ஒவ்வொருவருக்கும் ‘இப்படிதான்’ என்றொரு பிம்பம் மனதில் எழும். நிகழ்கால தலைவர்களை கருத்தில் கொண்டு பலர் தலைமைத்துவத்திற்கான அம்சங்களை புரிந்து வைத்திருக்கிறார்கள். தற்காலத்தில் நம் கண்முன் வாழும் சமுதாயத் தலைவர்கள் விதிவிலக்கான சிலரைத் தவிர பலர் உயர்தர உடையும், ஐந்து நட்சத்திர உணவகங்களும், மாளிகை போன்ற வீடுகளும், பயணிப்பதற்கு குளுகுளு வாகனங்களுமாய் ஜொலிப்பவர்கள். இன்றைய சூழலில் தலைவர்களாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படுபவர்களில் பலர் மேற்குறிப்பிட்டது போன்றதொரு வாழ்க்கை முறையில் இருப்பதை மறுக்க முடியாது.

ஒருவர் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதாலேயே அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம் கூடுகிறது. அவரைப் பின்பற்றவும் தயாராகிவிடுகிறது. எதைக் கண்டு இந்த மனமாற்றம் என்ற கேள்விக்கான பதில் என்பது யாருக்கும் தெரியாது.
அப்படியானால் தலைவர்களின் தகுதிதான் என்ன? அவர்களின் வாழும் முறை, குணம், அறிவு முதலிய ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும்? தனிநபர், கூட்டுவாழ்வின் நடத்தை என்ன? பண்புநலன்களின் பிரதிபலிப்புதான் என்னென்ன? என்று இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அந்தத் தலைவர்களிடம் தொண்டர்கள் ஈர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியதுதான்!
இவற்றில் ஏற்கனவே சொன்னது போல, விதிவிலக்கான தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். இத்தகைய இஸ்லாமிய கொள்கைச்சார் தலைவர்கள் மனித குலத்திற்கே முன்மாதிரியாக இருப்பவர்கள்.
உலகத் தலைவர்களில் மாபெரும் ஆளுமைப் பண்புக்குரியவர்களாக விளங்கும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) நபியின் வாழ்வை எடுத்துகொண்டால் அவர்களின் நற்பண்பு, அறிவாற்றல், பொறுப்புணர்வு, தியாக மனப்பான்மை, அனுசரணை என்று வாழ்வின் அனைத்துக் கூறுகளின் பிரதிபலிப்புகளும் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடியவை. அத்தோடு இந்த வழிகாட்டுதல் மூலம் வாழ்வின் எல்லா துறைக்கும் சிறந்த தீர்வுகளையும் பெற முடியும்.
அண்ணலாரின் வாழ்வு மிகவும் எளிமையாக இருந்தது. மதீனாவை ஆட்சி செய்த ஆட்சியாளராக இருப்பினும் அவர்களின் வீடு மிகவும் சிறியது. வசதியாக இறை வணக்கம் செய்யக் கூட முடியாதளவு சிறியது.
நபியவர்கள் வீட்டில் பெரும்பான்மை காலம் அடுப்பு எரியாது. அவ்வளவு வறுமை. இதை நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா நாச்சியார் பதிவு செய்கிறார்கள். பேரீச்சத்தோடு ஆட்டுப் பால் அல்லது வெறும் தண்ணீர்தான் அவர்களின் உணவாக இருந்தது. இத்தனைக்கும் மக்காவின் பெரும் செல்வச் சீமாட்டி கதீஜா நாச்சியாரின் அன்புக்குரிய கணவராக இருந்தவர்கள். ஆக, எளிமையை, வறுமையை நபி பெருமானார் தேர்வு செய்து கொண்டார்கள்.
அண்ணலாரின் சமகாலத்து ரோம மன்னர்களும், பாரசீக மன்னர்களும் பட்டு, பீதாம்மரத்திலும், செல்வச் செழிப்பான படாடோப வாழ்விலும் திளைத்திருந்த நேரத்தில்தான் நபிகளார் இத்தகைய வறிய நிலையில் வாழ்ந்தார்கள் என்பது முக்கியமானது.
இந்த முன்மாதிரிதான் நேற்று, இன்று, நாளையுமாய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் தொண்டர் படையை இறைநம்பிக்கையாளர் என்னும் பின்பற்றாளர்களை உருவாக்கித் தந்தது. இன்றும் பல கோடி மக்கள் இதயங்களில் வாழ்பவர் அண்ணல் நபி (ஸல்). ஆனாலும், இறைவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று அடித்துச் சொன்னார்கள். அளவுகடந்து தன்னை புகழ்வதை அவர்கள் ஒருநாளும் அனுமதிக்கவில்லை. அளவுக்கடந்த ஆர்வத்தில் அப்படிப் புகழ்வோரையும், “என் மீது மண் வாரி இறைக்காதீர்!” – என்ற சொல்லடுக்கில் அதைத் தடுத்துவிட்டவர்கள்.
‘மாபெரும் புரட்சிக்குச் சொந்தக்காரரான நபிகள் நாயகம் தமது உருவப் படத்தைக் கூட விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லையே!’ – என்று வருத்தப்பட்டார் ஒரு எழுத்தாளர். அப்படி விட்டுச் சென்றிருந்தால் தம்மையும் ஒரு பெரியவராக்கி மாலை, மரியாதைகளோடு அபிஷேகங்களில் திளைத்தெடுத்து கடவுள் என்ற கட்டத்துக்கு கொண்டு சென்றுவிடுவர் என்ற தீர்க்கதரிசனத்தின் விளைவே அது. அண்ணலாரின் நிழலுருவம் தெரியாவிட்டால் என்ன? அவர்கள் விட்டுச் சென்ற பண்பு நலன்கள் வாழ்வின் நிஜ பிம்பங்களாய் காலந்தோறும் வலம் வந்து கொண்டிருப்பவை. மனித உள்ளங்களில் உயிர்மூச்சாய் இருப்பவை.
நபிகளாரின் வாழ்வை படித்தவர்களும் புரட்சியாலரானார்கள். அண்ணலாரின் விழுமியங்களை முன்வைத்தே தம்மை தகவமைத்துக் கொண்டார்கள். வெறும் இருபத்து மூன்று ஆண்டு உழைப்பில் ஒரு முன்மாதிரி சமூகத்தையும் அதை வழிநடத்தும் தலைவர்களையும் உருவாக்கி காட்டினார்கள். அத்தகைய ஒரு சமூகத்தை பின்னடையச் செய்ய இன்று வரை ஒரு சமூகம் தோற்றம் பெறவில்லையே என்று உலகமே வியந்து பார்த்துகொண்டிருக்கிறது.
ஆஹா..! இவரல்லவா முன்மாதிரி தலைவர்!
அஹ்மத் ரிஸ்வான்.
Advertisement