சட்டமும் ! சமூகமும் ! (அதிரை உபயதுல்லா அவர்களின் சிறப்பு கட்டுரை)

சமூகத்தில் அமைதியும்,நியாயமும் நிலைநாட்டபடவே சட்டங்கள் ஏற்படுத்தபட்டன. அதன்மூலம் அன்றாடங்காச்சி முதல் ஆட்சியாளன் வரை கட்டுகோப்பாய் நடப்பதற்கே தண்டனைகளும் ஏற்படுத்தபட்டன. தவறு செய்ய நினைப்பவனும் தண்டனைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி தவறு செய்யும் சிந்தனையையே மறக்கடிக்கபட வேண்டும் என்பதே அதன் அடிப்படையும் கூட.

ஆனால் சமூகத்தின் இன்றைய நிலை என்ன?

10 க்கு மேற்பட்ட பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவன் கைது !
49 முறை சைக்கிள் திருடியவன் 50 வதாவது முறையும் பிடிபட்டான் !
நூறு ரூபாய் லஞ்சம் வாங்கியவன் ! முகத்தைமூடி அழைத்துசெல்லபடுகிறான் !
நூறு கோடி ஊழல் செய்தவன் டாட்டா காட்டி செல்கிறான் !

கூட்டு கற்பழிப்பு செய்தவர்கள் பகட்டாக சுற்றுகிறார்கள், பாதிக்கபட்ட பெண்ணிண் குடும்பம் பயந்து ஊரை காலி செய்கிறது. ஆசிட் வீச்சு,கூலிப்படை கொலை,பகலில் கொள்ளை,இதற்கும் மேலாக குண்டு வெடிப்பு பொன்ற செய்தியையும் செய்தித்தாள்களில் தினம் தினம் பார்த்திருக்கலாம்.

சட்டத்தின் மீது என்ன பயம் ஏற்பட்டது இவர்களுக்கு? காரணம் என்ன?

கீழ் கோர்ட் தண்டித்தால் மேல் கோர்ட்டில் விடுதலை, மேல் கோர்ட் தண்டித்தால் சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை. ஒரே சட்டம் எப்படி நீதி மன்றத்திற்கு நீதிமன்றம் மாறுபடுகிறது? இதில் வாய்தா மேல் வாய்தா வேறு. அப்படியும் வழக்கு முடிந்து தண்டனை தீர்ப்பாகும்போது குற்றவாளி வாழ்க்கையை முடித்திருப்பான். அப்படியே விரைவாய் தீர்ப்பு கிடைத்தாலும் இருக்கவே இருக்கு பெயில். அதையும் தாண்டி தண்டனை கிடைத்தாலும் ஜெயில் என்ற பெயரில் அரசாங்க செலவில் அறுசுவை உணவோடு பாதுகாப்பாய் உறக்கம். தண்டனையை பெற்றவன் சிரித்துகொண்டே ஜீப்பில் ஏறுவது ஏன் என்று இப்போது புரிகிறதா? நேர்மையான காவலர்கள்,வழக்குறைஞர்கள்,நீதிபதிகள் அனைத்தும் ஒருங்கே அமைந்தாலும் பல நேரங்களில் குற்றவாளிக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை. 

தீர்வுதான் என்ன?

சட்டத்தில் தெளிவும், தண்டனையில் கடுமையும், பாரபட்சமில்லாத நியாயமும் நிலைநிறுத்தலும் வேண்டும். நிலையான சட்டம் வேண்டும் அது பாமரனுக்கும் புரிய வேண்டும். வழக்கு விரைந்து முடிந்து தண்டனையும் விரைவாய் கொடுத்தல் வேண்டும். சட்டத்தில் அரசியல் குறுக்கீடு அறவே அழித்தல் வேண்டும். லஞ்சம் ஒழித்தல் வேண்டும். நேர்மை நிலைத்தல் வேண்டும். சட்டமும் ஒழுங்கும் எல்லா மட்டத்திலும் நித்தமும் புலங்க வேண்டும். அந்த அமைதி இந்தியா உருவாக வேண்டும்.

அந்நாளை எதிர்நோக்கும் மக்கள் !

ஆக்கம் :
அதிரை உபயா (எ) உபயதுல்லா 

Advertisement

Close