உரையாடல்களில் வெளிப்பட்ட அந்த இரண்டு சம்பவங்கள் !

  அலுவலகத்தின் காலை சிற்றண்டி நேரம். சிற்றுண்டியைப் பெற்றுக் கொண்டு மேசையில் அமர்ந்தபோது பக்கத்தில் நடந்துகொண்டிருந்த உரையாடல் தெளிவாக காதில் விழுந்தது. பாகிஸ்தான் உளவாளி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் செய்திகள் குறித்த உரையாடல் அது.  சற்று சங்கடத்துடனேயே சிற்றுண்டியை சாப்பிட வேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் பரபரப்பாக முஸ்லிம்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு அவை மறக்கடிக்கப்பட்ட பிறகு, உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்படுவர். இதை எந்த ஊடகமும் அதேபரபரப்போடு ஒரு காலும் செய்திகள் வெளியிடுவதில்லை. அசிமானந்தா போன்ற நிறைய உதாரணங்கள் இருந்தும் முஸ்லிம்கள் மீது ஏகத்துக்கும் பதியப்படும் குற்றங்கள் நினைவுகளில் அப்படியே தங்கிவிடும்.
அதேபோல, ஈராக்கை துவம்சம் செய்தது போதாதென்று இஸ்ரேலுக்கு சரி நிகராய் நெஞ்சை நிமிர்த்திய சிரியாவையும் நாசம் செய்ய ஏற்படுத்தப்பட்ட சதி ஐஎஸ்ஐஎஸ் என்பது பின்னாளில் நிரூபணமாகும்போது உண்மைகள் நிலைக்காமல் பொய்மைகள் அழியாமல் நிரம்பி நிற்கும்.
இத்தகைய உரையாடல்களில் குறுக்கிட முடியாது. அது நாகரீகமற்ற செயல் என்பதோடு விளைவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அதனால்.
சிற்றுண்டியை முடித்துவிட்டு தேனீரைப் பெற்றுக் கொண்டு மற்றொரு மேசையில் அமர்ந்தேன்.
அதற்கு முன்னால் பரிச்சயமில்லாத ஒருவர் என்னைப் புன்னகையுடன் எதிர்கொண்டு அதே மேசையில் வந்தமர்ந்தார். அங்கும் ஒரு உரையாடல். அந்த உரையாடலின் சுருக்கம் இதுதான்:
‘நேற்று மாலை அவரது செல்பேசி காணாமல் போயிருக்கிறது. சாம்சங்கின் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் அது. இத்தகைய செல்பேசிகள் மீது இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் அளவில்லாத பிரேமை உங்கள் அனைவருக்கும் தெரியும். இனி அந்த செல்பேசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டு தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது நண்பர்கள் மூலமாக அந்த எண் கிடைத்ததாகவும், தொலைந்து போன அவரது செல்பேசி தான் கண்டெடுத்ததாகவும், நேரிடையாக வந்து பெற்றுக் கொள்ளும்படி எதிர் முனையிலிருந்து தகவல்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மையான அந்த அழைப்புக்கு மகிழ்ந்து போன நண்பரும், நேரிடையாக சென்று தனது செல்பேசியைப் பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். அதை அவரிடம் ஒப்படைக்கும்வரை தான் மிகவும் கனத்த இதயத்துடன் இருந்ததாக செல்பேசியைத் திரும்ப ஒப்படைத்த இளைஞர் தெரிவித்திருக்கிறார். கவனமுடன் வைத்துக் கொள்ளும்படி புன்னகையுடன் கூறிவிட்டு விடைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். மேற்கொண்டு தம்மைப் பற்றி எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
“இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனைக் காண்பது மிகவும் அரிது!” –   என்று அந்த உரையாடலில் என்னை நோக்கிப் புன்னகைத்தவர் சொல்ல, அவரது நண்பர், “அந்த இளைஞனின் பெயரையாவது கேட்டாயா?” – என்றார் ஆவலுடன்.
“ம்.. கேட்டேன்.. அவரும் சொன்னார். ஞாபகம்தான் வரவில்லை. ஆனால்… ஆனால்… அது ஒரு முஸ்லிமுடைய பெயர் என்பது மட்டும் தெரிந்தது!” – என்றார் முகமெல்லாம் மலர்ச்சியுடன்.
இத்தகைய பண்புநலன்கள்தான் முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும். காலமெல்லாம் பேச வைக்கும். ஆயிரமாயிரம் தீவிரவாதப் பட்டங்களை சுமத்தினாலும், துவேஷங்களை மலை மலையாய் சுமத்தினாலும் நம்ம மறுக்கும் அரணாக நிற்கும்.
-பி. சையத் இப்ராஹீம்.


Advertisement

Close