மொபைல் போன் தண்ணீரில் விழுந்து விட்டதா?

image

கடன்பட்டாலும் உடன்பட்டு, ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் மொபைல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்து அம்போவான நிகழ்வுகளும் உண்டு. அதேவேளை, அதிர்ஷ்டவசமாக தப்பிய மொபைல்களும் உண்டு! சமீபத்திய ஆய்வு ஒன்றில் 20 சதவீத மொபைல்கள் தண்ணீரால் பாதிக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு வருவதாக தெரிய வந்துள்ளது.
சரி, மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டால் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
மொபைலை ஆன் செய்ய வேண்டாம். இது போனில் உள்ள மதர்போர்டில் குறைந்த மின்னழுத்தத்தை ஏற்படுத்தலாம். மொபைல் உள்ள எந்த ஒரு பொத்தானையும் அழுத்த வேண்டாம். இதுவும் சிக்கலை ஏற்படுத்தும்.
சிலர் மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் தண்ணீர் வெளியேறிவிடும் என்ற நினைப்பில் போனை நன்றாக குலுக்குவார்கள். ஆனால் தண்ணீர் போனிற்கு உள்ளே செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இது சர்கியூட்டில் சேதத்தை ஏற்படுத்தவும் செய்யும். இதனால், போனை குலுக்க வேண்டாம்.

மொபைல் தண்ணீர் விழுந்தவுடன் சார்ஜ் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சார்ஜ் செய்வதால் போன் நன்றாக வேலை செய்யும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால், அது தவறு. தண்ணீரில் விழுந்த போன் சிறிது வேலை செய்ய தொடங்கியதும், போனில் எந்தவித செயல்பாடுகளையும் செய்ய வேண்டாம். எல்லாம் தெரிந்தது போல் போனை பிரித்து பார்க்கவும் கூடாது.

அப்படியானால் என்ன தான் செய்ய வேண்டும்?

போன் தண்ணீரில் விழுந்தவுடன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு என போனில் உள்ள அனைத்தையும் கழற்றி தனித்தனியாக எடுத்து விடவேண்டும். போனில் பேட்டரி இருக்கும் பக்கத்தை தரையில் இருக்கும் படி வைத்து விட்டு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். மற்றபடி தண்ணீரை எடுக்கும் முயற்சியில் உடனே ஊத வேண்டாம், போனில் உள்ள தண்ணீர் வடிய சில மணி நேரங்கள் காத்திருங்கள்.

ஹேர் ட்ரையர் போன்றவை மூலம் சூடான காற்றால் போனை சுத்தம் செய்யலாம். இது போனில் உள்ள தண்ணீரை ஆவியாக்கும். ஹேர் ட்ரையர் இல்லை என்றால், அது போன்ற ஏதாவது ஒரு சாதனத்தை உபயோகிக்கலாம்.

போனை ஆன் செய்த பிறகு போனின் தொடுதிரையில் பிரச்சனை மற்றும் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மூன்று நாட்களுக்கு பிறகு ஆன் செய்து பாருங்கள். அதன் பிறகும் பிரச்சனை நீடித்தால் வேறு வழியே இல்லை. போனை சரிசெய்யும் இடத்தில் கொடுப்பதே சிறந்த தீர்வு.

Close