தென்னை விவசாயிகளின் கவனத்திற்கு!

தஞ்சை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை கொள்முதல் நிலையத்தில் தென்னை விவசாயிகள் தங்கள் கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நேரடி கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை (வணிகம்), கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் நிலையம் தொடங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அவர் கூறும்போது,வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் கொப்பரை கொள்முதல் நிலையம் தென்னை வணிக வளாகம் வளவன்புரம், வெண்டாக்கோட்டை ரோடு பட்டுக்கோட்டையிலும், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் பேராவூரணி பகுதியில் வேளாண் வணிக மையம் பள்ளத்தூரிலும், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் ஒரத்தநாடு பகுதியில் ஒரத்தநாடு சி.எம்.எஸ்.

வளாகத்திலும், கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படும். கொள்முதல் 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தென்னை பயிரிடும் விவசாயிகள் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய அடையாள அட்டை பெற்று தங்களிடம் உள்ள கொப்பரைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொள்முதல் நிலையங்களில் விவரங்கள் பெற ஒரத்தநாடு 04372 233231, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி 04373 235045 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சந்திரசேகர், கும்பகோணம் சார் ஆட்சியர் கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ராஜசேகர், தஞ்சாவூர் ஆர்டிஓஜெய்பீம், இணை பதிவாளர் சுப்பிரமணியன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சீனிவாசன் (பொ), துணை இயக்குனர் உதயகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-dinakaran

Close