தனக்கு தானே 100/100 போட்டு கொண்ட மாணவன் !

குஜராத்தில் 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தேர்வு தாளில் தனக்கு தானே 100க்கு 100 மதிப்பெண் போட்டு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு முறைகேடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் முறைகேடு இந்தியாவையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய கவர்னர் மகன் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்தனர். இதை தொடர்ந்து தற்போது பீகாரில் பள்ளி தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் கத்தை கத்தையாக பணத்தை வாரியிறைத்து சான்றிதழ்களை வாங்கிய அவலம் அரங்கேறியுள்ளது. இந்த சூழலில் தற்போது குஜராத்தில் உள்ள 12ம் வகுப்பு மாணவன் தனது விடைத்தாளுக்கு தானே 100க்கு 100 மதிப்பெண் போட்டு கொடுத்த அவலம் நடந்துள்ளது.
12ம் வகுப்பு படிக்கும் ஹர்ஷத் சர்வையா என்ற அந்த மாணவர் தானே தேர்வாளராகவும், மாணவராகவும் இருந்து, தனது விடைத்தாளில் சிவப்பு மையால் 100க்கு 100 மதிப்பெண் போட்டு பின்னர் தன் விடைத்தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவன் தானே பொருளாதாரம் மற்றும் புவியியல் பாடங்களின் விடைத்தாள்களை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை சம்பவ இடத்தில் மாணவனை கையும் களவுமாக பிடிக்க ஆசிரியர்கள் தவறிவிட்டனர். எனவே தற்போது மாணவனை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டு தேர்வுகள் எழுத மாணவனுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகம் ஏற்படாமல் இருக்க முன் பக்கத்தில் மொத்த மதிப்பெண்ணையும் போடாமல் மாணவன் தவிர்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. இத்தனைக்கும் அதை 7 ஆசிரியர்கள் மதிப்பிட்டும் கூட மாணவனின் ஒழுங்கீனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆசிரியர்கள் வெறுமனே பக்கத்தில் உள்ள மதிப்பெண்ணை கூட்டி பார்த்து விட்டு 100க்கு 100 என்பது சரி என கையெழுத்திட்டு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது கவலை அளிக்கும் அம்சமாகும் என்று அதிகாரி தெரிவித்தார்.
மாணவனின் விடைத்தாட்களை கணிப்பொறியில் செலுத்திய போது அதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே அவனது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவன் ஹர்ஷத் பொருளாதாரத்தில் தனக்கு தானே 100க்கு 100 மதிப்பெண் போட்டுக் கொண்டாலும் மற்ற பாடங்களில் அவன் மிகவும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளான். குஜராத்தியில் 13, ஆங்கிலத்தில் 12, சமஸ்கிருதத்தில் 4, சமூகவியலில் 20, உளவியலில்5, புவியியலில் 35 மதிப்பெண்கள் பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Close