Good Bye அம்பயர் பில்லி புவுடன்!

image

சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனால், இந்தியர்கள் எப்போதாவது சிரிப்பார்கள். அதனை செய்ய இவரால் மட்டுமே முடியும். தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸர்களை கூட ரசிக்காமல் ஆடுகளத்தில் இன்னொருவரை ரசிக்க முடியும் என்றால், அவரது பெயர் ‘பிரெண்ட் பெஸர் பில்லி புவுடன்’ என்று இருக்க வேண்டும். ஆம் ஆடுகளங்களில் விக்கெட், சிக்ஸர், பவுண்டரிகளை வித்தியாசமாக அறிவிக்கும் ஆல் டைம் ஃபேவரைட் அம்பயர் பில்லி பவுடனுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஓய்வு அளித்துள்ளது ஐசிசி.
தொடர்ச்சியாக கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களிடம், ‘அவர்கள் யாருக்கு ரசிகர்கள்?’ என கேட்டால் சச்சின், லாரா, பாண்டிங் என்றும், இபோது தோனி, கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என்றும் பட்டியல் நீளும் கடந்த 21 வருடங்களாக 200 ஒருநாள் போட்டிகள், 84 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றிய பில்லிக்கும் இவர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம்.

அவரது துறு துறு அம்பயரிங், சண்டை வந்தால் வேகமாக நகர்ந்து சமாதானம் செய்வது, வீரர்களுடன் சகஜமாக பழகுவது, விரல்களால் மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கட்டிப் போடுவது போன்றவைதான் அதற்கு பதிலாக இருக்கும். அதிலும், க்ரூக்டு ஃபிங்கர் எனும் விரல்களை வளைத்து, அவர் விக்கெட்டை அறிவிப்பது க்ளாஸ்.
நியூஸிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன், 2000 வது ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின்போது அம்பயராக அறிமுகமானார். பின்னர் 2005 ல், இதே இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் முதல் முறையாக பணியாற்றினார் பில்லி.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் க்ளேன் மெக்ராத், ஜாலியாக நினைத்து அண்டர் ஆர்ம் பந்து வீச, அவருக்கு ஃபுட் பாலில் வழங்கப்படுவது போன்ற ரெட் கார்டு வழங்கி பில்லி கெத்துக் காட்டினார்.
ஒருமுறை இந்திய – பாகிஸ்தான் போட்டியில், இந்திய வீரர்கள் அவுட் கேட்டு முறையிட, சற்று தாமதித்து விரலை உயர்த்திய பில்லிக்கு பின்னால், ரெய்னா அவரைப் போலவே நடித்து அவுட் சொன்னதை ஜாலியாக எடுத்துக் கொண்டார்.
ஆஷஸ் ஸ்லெட்ஜிங்கில் வார்னர்-பெல் சண்டையை சட்டென உள்ளே நுழைந்து தடுத்ததும், தோனி கோபப்படுவதே அரிது, அப்படி கோபப்பட்ட போது அவரை சமாதானப்படுத்தியது பில்லியின் கில்லி ரெக்கார்ட்ஸ்.
அவர் ரெமடாய்டு ஆர்தரிட்டிஸ்(rheumatoid arthritis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது விரல்களை அசைத்தும், நீண்ட நேரம் மைதானத்தில் நின்று ஆட்டத்தை கணிப்பதும் அவரது உடல் நலத்துக்கு சரியல்ல என்று நியூஸிலாந்தின் ஐசிசி நடுவர்கள் குழுவில் இருந்து பில்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் ஐசிசியின் ப்ரவுன் பெயில்ஸ் விருதை பெற்றுள்ளார். ஆனால் ஆஸி வீரர்களுக்கு ஏனோ பில்லி மேல் கோபம். 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், ‘மோசமான அம்பயர்’ என பில்லியை ரேட் செய்தனர்.
இனி பில்லியின் விரல்கள் அவுட் சொல்லாது. சிக்ஸர்கள் பறந்தால் ரசிகர்கள் பந்தை மட்டுமே கவனிப்பார்கள். மைதானத்தில் இனி அனைவரும் கிரிக்கெட் மட்டுமே பார்ப்பார்கள். அம்பயர்களில் எண்டெர்டெயினர் பில்லிதான். விக்கெட்டைகளையும் ‘மகிழ்ச்சி’ எனக் கூற வைக்க, பில்லியால் மட்டுமே முடியும்.
‘பில்லி பவுடன் இனி க்ரூக்ட் ஃபிங்கட் அவுட் தராவிட்டாலும் பரவாயில்லை, நலமாக இருந்தால் போதும்’ என்கின்றனர் அவரது ரசிகர்கள். குட் பை அண்டு டேக் கேர் பில்லி…!

image

Close