பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை ரமலான் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி!

imageரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவில் பயன்படுத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் குமாரவேலு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வழிப்பாட்டு தலங்கள், பொதுநிகழ்ச்சிகளில் அதிக ஒலிகளை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், வழிப்பாட்டு தலங்களில் அதிகாலையிலேயே ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் அதிக ஒலி மாசுவை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்தப்பட்டதாக கூறி 44 வழிபாட்டு தலங்களின் பட்டியலை மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு, மனுதாரர் குறிப்பிட்டுள்ள 44 இடங்களில் 26 இடங்களில் இருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.

இதனிடையே பள்ளிவாசல்கள் மற்றும் ஷரியத் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இணைப்பு மனுவில், ரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரமலான் முடியும் வரை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக அனுமதி வழங்கியது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Close