பட்டுக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது: அதிகாரிகள் நடவடிக்கை!

201606251039167121_officers-action-for-Fake-doctor-arrested-near-pattukkottai_SECVPFதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கொல்லைக்காடு பகுதியில் உரிய மருத்துவ சான்றிதழ் இல்லாமல் மருத்துவர் படிப்பை படிக்காத சிலர் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக தஞ்சை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துறைக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் ஜெயசேகர் தலைமையில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் ஒருங்கிணைப்பாளர் எட்வின், ஒரத்தநாடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்(பொறுப்பு) வெற்றிவேந்தன் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொல்லைக்காடு கடைத்தெருவில் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பாலசுப்பிரமணியனை (வயது55) பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் உரிய மருத்துவ சான்றிதழ் மற்றும் முறையான அனுமதியின்றி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் ஜெயசேகர் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். மேலும் போலி டாக்டர் பாலசுப்பிரமணியனையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மருத்துவம் பார்ப்பதற்கு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் மருந்துமாத்திரைகளையும் மருத்துவ நலப்பணிக்குழுவினர் வாட்டாத்திக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Close