மோட்டார் சைக்கிளில் போன மூன்று இஸ்லாமிய  இளைஞர்கள் பலி : கொழும்பில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிராதன வீதியில் ஜயந்தியாய எனும் இடத்தில் நேற்று (29) இரவு 07.00 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் பொலநறுவை போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஜயந்தியாய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வபாத்தானவர்களில் இரண்டு பேர் பாடசாலை மாணவர்களாவர். ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் கரீம் கஸ்மீர் (வயது – 15), ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயிலும் சனூஸ் இம்தாத் (வயது – 16), நிஸ்தார் இஸ்பாக் (வயது – 19) என்ற மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்து ஆபத்தான நிலையில் பொலநறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் புஹாரி சியாம் (வயது – 26) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வபாத்தான மூன்று பேரில் இரண்டு பேரின் ஜனாசாக்கள் வெலிக்கந்தை வைத்தியசாலையிலும் ஒருவரது ஜனாசா பொலநறுவை போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதுடன் இம் மூன்று ஜனாஸாக்களினதும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகள் இன்று (30) வியாழக்கிழமை பொலநறுவை போதனா வைத்தியசாலையில் இடம் பெறவுள்ளதாகவும் அதனால் வெலிக்கந்தையில் உள்ள இரண்டு ஜனாஸாக்களும் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நான்கு பேரும் தலைக்கவசம் அணியாமையும் அதிக வேகமுமே இம் மரணத்திற்கான காரணம் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Close