தஞ்சாவூரை எழில்மிகு மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை!

தஞ்சாவூர் மாநகராட்சியை எழில்மிகு மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
மக்கள்தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர்   நகராட்சியை மாநகராட்சியாக தமிழக அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது.
இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,
1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.
இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மாநகராட்சியை எழில்மிகு  மாநகராட்சியாக  உருவாக வழிவகுக்கும்   என்பதை  அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Close