முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் முகமது சாகித் மரணமடைந்தார்!

foot_baller_shahid-1.jpgஇந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திர வீரர் மொகமது ஷாகித் குர்கவானில் இன்று காலமானார். அவருக்கு வயது 56. இந்திய ஹாக்கி அணியின் மரடோனா என்றே இவரை அழைக்கலாம். அவ்வளவு வேகம், அவ்வளவு சுறுசுறுப்பு, மற்றும் திறமை வாய்ந்தவர் மொகமது ஷாகித்.

கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக இவர் கோமாவில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கேப்டனான மொகமது ஷாகித் இந்திய ஹாக்கி வீர்ர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். இவர் பந்தை எடுத்துச் செல்லும் வேகம் பந்தை எதிரணி வீரர்களிடமிருந்து பறித்து அபாரமான முறையில் டிரிபிளிங் செய்பவர். மிகவும் அபாயகரமான செண்டர் ஃபார்வர்டு வீரர் என்று பெயரெடுத்தவர் மொகமது ஷாகித்.

தன்னலமற்ற முறையில் கோல் வாய்ப்புகளை உருவாக்கித் தருபவர் அதே வேளையில் தனது அபார வேகம் மற்றும் சுறுசுறுப்பான் டிரிப்பிளிங்கினால் ஃபீல்ட் கோல்களையும் அடித்தவர் மொகமது ஷாகித்

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த மொகமது ஷாகித் 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்ற போது குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர். பிறகு இவருக்கு அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. 1982, 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் ஆடினார்.

இந்நிலையில் 56 வயதான மொகமது ஷாகித் மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். மஞ்சள் காமாலை, டெங்கு ஆகிய காய்ச்சல்கள் அவரது உடல்நிலையை மோசமாக்கியது. வாரணாசியிலிருந்து இவர் விமானத்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.45 மணியளவில் இவரது உயிர் பிரிந்ததாக இவரது மகன் மொகமது சயீப் தெரிவித்தார்.

பாஸ்கரன் தலைமை மாஸ்கோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் விளையாடி குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்த ஷாகித், 1982 டெல்லி ஆசியப் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்ற அணியிலும், 1986 சியோல் ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் விளையாடியவர்.

பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஹாக்கி முன்னாள், இந்நாள் வீரர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

மொகமது ஷாகித்தின ஆட்டம் குறித்து இவரது நண்பரும் முன்னாள் வீரருமான எம்.கே.கவுஷிக் கூறும்போது, “1980-ல் அவர் இளம் வயதினராக இருந்தார். அணியில் ஒவ்வொருவரையும் மதிக்கக்கூடியவர், மிகவும் ஜாலி டைப். அவர் பந்தை தன் மட்டையில் கடைந்து எடுத்துச் செல்லும் திறமையில் தன்னிகரற்றவர், இவரது திறமையினால் இந்திய அணி நிறைய பெனால்டி வாய்ப்புகளைப் பெற்றதோடு களத்திலிருந்து பந்தை கோலுக்கு அனுப்புவதிலும் வல்லவர்” என்றார்.

ஷாகித் 1979-ம் ஆண்டு இந்திய ஜூனியர் அணிக்காக பிரான்சில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பையில் முதன் முதலில் அறிமுகமானார். இதே ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற 4 நாடுகள் ஹாக்கி தொடரில் வாசுதேவன் பாஸ்கரன் தலைமை இந்திய மூத்தோர் அணியில் அறிமுகமானார் ஷாகித்.

இவர் அணியில் சேர்ந்த பிறகு அணிக்கே புதிய உற்சாகம் பிறந்தது, இவரும் ஸஃபர் இக்பால் என்பவரும் அமைத்த தாக்குதல் கூட்டணி மறக்க முடியாத ஒன்றாகும். கராச்சியில் 1980-, ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘சிறந்த முன்கள வீரர்’ விருது பெற்றார் ஷாகித். 1986-ம் ஆண்டு ஆசிய அனைத்து நட்சத்திர அணியில் மொகமது ஷாகித் இடம்பெற்றது இவரது முழுத்திறமைக்குக் கிடைத்த பரிசாகவே கருதப்பட்டது. இந்திய ஹாக்கி அணிக்கு 1985-86-ம் ஆண்டு கேப்டனாக இருந்துள்ளார்.

இவரும் பாகிஸ்தானின் ஹசன் சர்தாரும் அந்தக் காலக்கட்டத்தில் மிகச்சிறந்த, அபாய வீரர்களாக உலக ஹாக்கி அணிகளினால் கருதப்பட்டவர்கள். ஆனால் இவரது சேவைகளை ஹாக்கி இந்தியா அதன் தடுமாற்ற காலங்களில் பயன்படுத்திக் கொண்டதில்லை என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்நிலையில் இவரது மரணம் ஹாக்கி உலகில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Close