அதிரையில் வட்டியின் கோரப்பிடியில் விழிப்பிதுங்கி நிற்கும் குடும்பங்கள்!

நமதூரில் பல தெருக்களில் பல மக்களிடம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வட்டியை ஒழிப்பது எப்படி???

அன்றாட பிழைப்பின்றி உணவு உடையின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு வழியின்றி வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், மகள், சகோதரியின் திருமணத்திற்காக வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், நடுத்தர வாழ்வை மகிழ்ச்சியாக கழித்தாலும் ஆடம்பர பொருட்களுக்காக வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், வட்டி என்பது ஹராம் என தெரிந்தும் வட்டிக்கு விடும் பணக்காரர்கள் ஒரு பக்கம் என அதிரையில் வட்டி தலைவிரித்தடுகிறது.

நமதூரில் வட்டி குறைவு என நினைக்கிறோம், ஆனால் பல பெண்கள் வட்டி வாங்கி வருகின்றனர். பணம் தரவில்லையென்றால் வட்டிக்கு விடுபவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டுவதும் நடக்கின்றது. நாம் ஒரு பகுதியை மட்டுமே அதிரை என நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் பல தெருக்களில் வட்டியின் கோர முகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இஸ்லாமியப் பார்வையில் வட்டி:
திருக்குர்ஆனில் வட்டி பற்றிய வசனங்கள்:

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(2:276)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தானதர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(2:278)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(3:130)

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். (4:161))

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(20:84)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

நபிமொழிகள்
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சொன்னார்கள், ரஸூல் (ஸல்) அவர்கள் வட்டியைச் சாப்பிட்டவன், அதை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியாகந்இருப்பவன், அதை எழுதுபவன் அனைவரையும் சபித்துள்ளார்கள் நூல்; திர்மிதி , நஸாயி

நமதூரில் பல இடங்களில் வட்டியின் தீமைகள் குறித்து தாவா செய்தாலும் ஒரு சிலரை தவிர பலரும் வட்டி ஈடுபட்டுதான் வருகின்றனர். இன்றளவும் நமதூரில் வட்டி கடைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன, அதில் ஒவ்வொரு கடைகளிலும் நமது பெண்கள் சென்றுதான் வருகின்றனர். இது குறித்து நமதூர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மார்க்கம் தெரிந்தவர்களின் கடமை.

நமதூரில் செல்வம் படைத்த பலர் அவசியமில்லாத பல ஆடம்பர காரியங்களுக்காக செலவு செய்கின்றனர். அதுபோல் அளவுக்கு அதிகமான ஆடம்பரத்துடன் திருமணம் செய்கின்றனர். இவ்வாறு ஆடம்பர செலவு செய்பவர்கள் இதில் ஒரு சிறு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்தால் அவர்கள் இந்த வட்டியில் இருந்து விடுபட கூடும்.

முஹல்லாக்கள், பல சங்கங்கள், எண்ணிலடங்கா அமைப்புகள் நமதூரில் இருந்தும் நமதூர் மக்களை வட்டியில் இருந்து மீட்க முடியவில்லையே…..!!!

இதற்கு காரணம் என்ன??? இதனை ஒழிப்பது எப்படி??? அறிந்தவர்கள் ஆலோசனை வழங்கலாமே!!!

ஆக்கம்:நூருல் இப்னு ஜஹபர் அலி

Close