Adirai pirai
articles

சொந்தமாக தொழில் தொடங்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை!

நேற்று தற்செயலாக ஒரு நண்பரை ஜித்தாவில் காண கிடைத்தது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் , அவர் பல வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து, ஓரளவுக்கு மேலே நன்றாய் சேமித்தும் , அந்த சேமிப்பை கொண்டு ஒரு தொழிலை நடத்த எண்ணி , இனி மீண்டும் மத்திய கிழக்குக்கே வருவதில்லை என்ற சபதத்தில் தாய் நாடு சென்றவர். அப்போது அவர் குறித்து நான் பெருமை பட்டதுண்டு. ஆனால் நேற்று அவரை கண்டபோது ஆச்சரியம் மேலோங்க ” என்ன நடந்த ?” என்ற கேள்வியை தவிர வேறொன்றும் என்னால் கேட்க முடியவில்லை.

அவர் ஒரு சிறிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற கணக்கில் ,சவுதி விட்டு 2012 ஆண்டே இறுதி விடுப்பில் சென்று விட்டார், அங்கு தன்னிடம் இருந்து சேமிப்பு முதலை கொண்டு சிறிய அளவில் தனி வியாபாரம் ஒன்றை ( ஆடைத்தொழில் மற்றும் தேயிலை ) ஆரம்பித்து,அதில் வெற்றி பெற முடியாமல் , தனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் கரைத்து விட்டும் மீண்டும் மத்தியகிழக்கு நோக்கி வந்தது குறித்து மிகவும் மனம் வருந்தியது மட்டுமல்ல, தனது வியாபரத்தின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டதையும் வைத்து பார்க்கும் போது சில விடயங்கள் குறித்த தெளிவின்மைதான் அவரை மீண்டும் இங்கு வர காரணமாய் அமைந்தது என்று நான் நினைக்கின்றேன்.

இங்கிருந்து தாயகம் திரும்பும் பலருக்கு இருக்கும் கனவுதான் , ஏதாவது தொழில் ஒன்றை ஆரம்பித்து , அதன் மூலம் தமது வருங்கால மீதி நாட்களை கடத்துவது என்ற எண்ணம். இதில் தவறேதும் இல்லை , ஆனால் இங்குள்ள மிகப்பெரும் பிரச்சினை , முதலை திரட்டுவது அல்லது இருக்கும் முதலை எப்படி பயன்படுத்துவது என்பதே.

தொழில் செய்வது என்று முடிவெடுத்தால் நம்மில் பெரும்பாலனவர்கள், சில்லறை அல்லது மொத்த வியாபார கடை வைப்பதையும், வேளாண்மை வெட்டும் இயந்திரம் வாங்கி வாடகைக்கு விடுவதையும், உணவகம் நடத்துவது , அல்லது குத்தகைக்கு வேளாண்மை செய்வது , அல்லது மிகச்சிலர் வாகனங்களை வாங்கி வாடகைக்கு விடுவது, மரக்கறி வியாபாரம் போன்றவற்றை தேர்வு செய்கின்றனர்.

இதில் தப்பு ஒன்றும் இல்லைதான் , ஆனால் இந்த தொழில்கள் அனைத்தும் சற்று சிரமப்பட்டு நடத்த வேண்டியவை என்பது நிறைய பேருக்கு தெரியாது. எப்போதும் தொழில் பின்னணி இல்லாமல் புதிதாக தொழில் செய்ய விரும்புகிறவர்கள் முதலில் மிகச்சிறிய முதலீட்டினைக்கொண்டு ஆரம்பிக்க கூடிய தொழில்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் வியாபார நெளிவு, சுளிவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் . எந்த தொழிலை செய்தாலும் அந்த தொழில் பற்றிய போதுமான தகவல்களை பெற்றபின்பே தொழிலைத் துவங்கவேண்டும்.

எனது நண்பர் , முன் பின் அனுபவமில்லாமல் , தன்னிடம் இருந்த அனைத்து முதலையும் ஒரு வியாபாரத்தில் இட்டு இப்போது எதுவுமே இல்லாமல் இருப்பது கூட இந்த காரணமாக கூட இருக்க முடியும். மேலும் சில நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு பண இருப்பு என்பது கட்டாயம் தேவை ஏன் எனில் வியாபாரம் ஆரம்பித்த உடன் நாம் நினைக்கும் வருமதியை அடைய ஒரு நாளும் முடியாது அந்நாட்களில் கையிருப்பில் உள்ள பணத்தை கொண்டே தொழிலை நடத்த வேண்டி வரும். அதற்கான

முன்னேற்பாடுகளுடன்தான் தொழிலைத் துவங்கவேண்டும்.
ஒருவேளை அந்த தொழிலை பற்றி விரிவான அறிவு தேவையெனில் அதற்கான ஆலோசகர்களை அல்லது அனுபவஸ்தர்களை அணுகினால் மேலும் அதை விரிவாக்க அல்லது வெற்றி கரமாக நடாத்த உதவியாய் இருக்கும். .

நாம் செய்யபோகும் தொழிலை ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு திட்டமிடுவது சாலச்சிறந்தது , அப்படி திட்டமிட்டால் அந்த தொழிலின் எதிர்காலம்பற்றி தெரிந்துவிடும். உதாரணமாக ஒரு காலத்தில் இருந்த தையல் கடைகள் , கொம்புயுட்டர் கடைகள் அல்லது இன்டர்நெட் கடைகள் பிரபலமான தொழிலாக இருந்தது.

இப்போது அதன் தேவையும், வடிவமும் மாறிவிட்டன. இதைபோல மாறக்கூடிய சாத்தியம் உள்ள தொழில்களை தவிர்த்துவிட வேண்டும். பொதுவாகவே உணவும், தண்ணீரும் எதிர்காலத்தில் முக்கிய வியாபாரம் என்பதால் சிறிய அளவிலான உணவுப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டால் அதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. உணவு பொருளில் தரமும், நல்ல அழகான உறையிலிட்டு பார்க்க பளிச்சென இருக்கும்படி இருந்தால், குறைவான விளம்பரம் மூலம் ஓரளவிற்கு சந்தையை பிடித்துவிடலாம். தரம் நம்மை மேலே கொண்டுபோய் சேர்த்துவிடும்.

அதே போல ஆடை வியாபாரமும் மனிதனின் முக்கிய தேவை என்பதால் அதையும் நன்கு திட்டமிட்டு , கொஞ்சம் ஆரம்ப முதலில் , மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சி அறைகளை கொண்டு, நேர்த்தியான வகையில் தெரிவு செய்யப்பட ஆடைகளை விற்பதன் மூலம் ஒரு சிறந்த வியாபாரியாக மிளிர முடியும்.

தொழில் ஆரம்பிப்பது என முடிவு செய்தபின் வரவு மற்றும் செலவு பற்றி கண்டிப்பாக கணக்கு வைத்திருக்கவேண்டும், பெரும்பாலோர் தவறுவது இதில்தான்.நான் மேலே கூறியவரும் தவறியதும் இதில்தான் தங்கள் சொந்த தொழில்தானே என கணக்கு பார்க்காமல் எடுத்து செலவு செய்வது, அடுத்து எல்லா நபர்களும் பணத்தைக் கையாளுவது, இதனால் ஒரு கட்டத்தில் தொழில் நலிந்து வேலை செய்தவர்களை சந்தேகப்பட்டும், குடும்பதினருக்குள் சண்டை வந்தும் தொழிலுக்கு மூடுவிழா நடத்திய பல நபர்களை நாம் தினமும் காண்கின்றோம் .

ஒரு தொழில் துவங்கிய பிறகு கண்டிப்பாக கணக்குகளை கையாள ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.அல்லது அதை நாமே சோம்பல் பாராமல் முன்னின்று செய்ய வேண்டும் , கணினி கைகொடுக்கும் இந்த நாட்களில் தினமும் இதை செய்வதால் அன்றைய நிலை அன்றைக்கே தெரிந்துவிடும். எவ்வளவு சிறிய தொழிலாக இருந்தாலும் மாதமொரு முறை கண்டிப்பாக அந்த மாத பிரச்சினைகளை அலசவேண்டும், அடுத்த மாதத்திற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துவிடலாம்.

மேலே சொன்னவைகள் பற்றி சிறிய அளவில் கூட ஒரு தெளிவான சிந்தனை இருந்தாலே நம் தொழிலுக்கான முதலீட்டு அளவு பற்றிய புரிதல் வந்துவிடும். எப்போதும் மற்றவர்கள் சம்பாதிப்பதைப் பார்த்து அதே தொழிலை செய்ய ஆசைப்படாதீர்கள். நமது பகுதியில் நாம் செய்யபோகும் தொழிலின் தேவையையும், அதன் வியாபார அளவையும் பற்றி ஆராய்ந்து களமிறங்குவது சாலச்சிறந்தது . அந்த பகுதியில் இருக்காத தொழிலை செய்வது மிக சிறந்தது .

ஒருவேளை நமக்கு நன்கு தெரிந்த தொழிலை நமது பகுதியில் நிறைய பேர் செய்கிறார்கள் என்றால், அதே தொழிலை அவர்களைக் காட்டிலும், வித்தியாசமாகவும், சிறப்பாகவும் நம்மால் செய்யமுடியும் என்று தெரிந்தால் ( நம்பினால் அல்ல) உடனே ஆரம்பியுங்கள். எப்போதும் நாம் செய்ய நினைப்பவைகளை துல்லியமாக முன் மாதிரி திட்டங்களை கையில் வைத்து இருந்தால். செயல்வடிவம் கொடுப்பது மிக சுலபமாக இருக்கும்.

தொழில் முதலீடு குறித்து ஒரு கட்டுரையில் படித்த விடையங்கள் நேற்று அந்த நண்பனை பார்த்த போது ஞாபகம் வந்தது, அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களை தொகுத்தும் , அந்த நண்பனின் அனுபவமும் சேர்ந்த பதிவு இது..
– Athambawa Waaqir Hussain-