கிடுகிடுவென உயரும் மிக்சர், காரசேவு, பஜ்ஜி, பூந்தி விலை!

தமிழகத்தில் கடலை மாவு, எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலியாக, மிக்சர், காரா பூந்தி உள்ளிட்ட பலகாரங்களின் விலை, கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்கிறது.

தமிழகத்தில் கொண்டக்கடலை மூலப்பொருளாக கொண்டு தயார் செய்யப்படும், கடலை மாவு, கடலை பருப்பு, பொரிகடலை ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ, 100 ரூபாய்க்கு விற்ற கடலை மாவு, 130 ரூபாயாகவும், 100 ரூபாய்க்கு விற்ற கடலை பருப்பு, 130 ரூபாயாகவும், 110 ரூபாய்க்கு விற்ற பொரிகடலை, 134 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து, எண்ணெய் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாயும், வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி கார, இனிப்பு பலகாரங்களில் பயன் படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களின் விலையும், 20 சவீதம் வரை, உயர்ந்துள்ளது. இது ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலை மாவை பயன் படுத்தி தயாரிக்கப்படும், பஜ்ஜி, போன்டா, வடை , மிக்சர், காராச்சேவு, பூந்தி உள்ளிட்ட அனைத்து பலகாரங்களின் விலையையும், ஓட்டல் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர். இதில், மிக்சர், காரச்சேவு, காரா பூந்தி ஆகியவற்றின் விலை, கிலோ, 180 ரூபாயிலிருந்து, 200 ரூபாயாகவும், பூந்தி, லட்டு, ஜிலேபி ஆகியவற்றின் விலை, கிலோ, 210 ரூபாயிலிருந்து, 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.உருளைக்கிழங்கு, நேந்திரம், குச்சிக் கிழங்கு ஆகியவற்றில் தயார் செய்யப்படும் ஜிப்ஸ் வகைகள், கிலோ, 280 ரூபாயிலிருந்து, 320 ரூபாயாகவும், போன்டா, பஜ்ஜி, வடை ஆகியவற்றின் விலை, 50 காசு முதல், ஒரு ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளனர்.இது குறித்து

சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிச்சாமி கூறியதாவது: தமிழகத்தில், ஓட்டல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும், கடலை பருப்பு, மாவு, பொரி கடலை ஆகியவற்றின் விலை கிலோவுக்கு, 30 ரூபாய் வரையும், எண்ணெய் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வால், அவற்றை மூலப்பொருளாக பயன் படுத்தி தயார் செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சிறிய அளவிலான கடைகளில், மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், பஜ்ஜி, போன்டா நான்கு ரூபாயாவும், நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யும் கடைகளில், ஐந்து ரூபாயாகவும் விலை உயர்கிறது. இதே போல், மிக்சர், காரா பூந்தி, காராசேவு, பூந்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையிலும் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை, விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்

Close